ஈரோடு : தமிழ்நாடு அளவில் பல்லுயிர் செறிவு மிக்க காடுகளை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளின் முக்கியத்துவம் கருதி, தமிழ்நாடு அரசு இதுவரை முறையாக பாதுகாக்கப்படாத வனப்பகுதிகளை காப்புக் காடுகளாக அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு முதல், தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 16ன் கீழ் 65 புதிய காப்பு காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, தேனி, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல உயிரிப்பன்மம் மிக்க பாதுகாக்கப்படாத வனங்களை அரசு காப்புக் காடுகளாக அறிவித்துள்ளது. அதேபோல, பல அரிய, இடவறை உயிரினங்கள் வாழும், தனித்துவமான சூழல் கொண்ட பல பாதுகாக்கப்படாத வளமான காடுகளை கொண்ட ஈரோடு மாவட்டத்திலும் புதிய காப்புக்காடுகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நிர்வாகி வி.பி. குணசேகரன் கூறுகையில்,” தமிழ்நாடு அரசின் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் காலநிலை மாற்றம் சார்ந்த ஆராய்ச்சி மையம், சமீபத்தில் காலநிலை மாற்றத்தால் காடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலேயே அதிக பரப்பளவிலான இலையுதிர் காடுகளும், புல்வெளிகளும் அழிந்து, முள்புதர் காடுகளாக உருமாறி வருவதாக அந்த அறிக்கையில் எச்சரித்து உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பெரியார் வன உயிர் சரணாலயம் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல வனப் பகுதிகளில் இலையுதிர் காடுகள், புல்வெளிகள் அழிந்து, சீமை கருவேல மரங்கள், உன்னி செடிகள் போன்ற அயல் தாவரங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து முள்புதற்காடுகள் உருவாகி வருகின்றன.
இதனை ஈரோடு மாவட்டத்தில், இயற்கை சார்ந்த செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்பினர் ஆவணப்படுத்தி உள்ளனர். மேலும் முள்புதராக உருமாறிய காடுகளில் மனித-விலங்கு மோதல்களும் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பழங்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட காடுகளை உருமாறி அழிந்து வரும் நிலையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், உயிரிப் பன்மத்தை பாதுகாக்கவும் மீதம் இருக்கும் பாதுகாக்கப்படாத வனப்பகுதிகளை கண்டறிந்து ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, முன்னெச்சரிக்கையுடன் அவற்றை பாதுகாப்பது தற்போது மிகவும் அவசியமான செயலாகும்.
ஈரோடு மாவட்டத்தில் இன்றும் பாதுகாக்கப்படாத பல்லுயிர்கள் வாழும் காட்டுப் பகுதிகள் பல இருக்கின்றன. அந்தப் பகுதிகளை சூழலியல் பார்வையில், அறிவியல் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தி, அங்குள்ள பல வகையான பல்லுயிர்களின் வாழ்விடங்கள், அதில் வாழும் தாவரங்கள், பல்லுயிர்கள், அறிய இடவறை உயிரினங்களை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், அப்பகுதிகளை ஆராய்ந்து காப்புக்காடுகளாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றுகளைச் சார்ந்துள்ள பாதுகாக்கப்படாத காடுகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து அவற்றை பாதுகாக்க வேண்டும்.
இதற்காக ஈரோடு மாவட்டத்தில், வனத்துறை வழிகாட்டுதலுடன் சூழலியல் நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து, பாதுகாக்கப்படாத காடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பிடப்பட்டுள்ள வனங்களைத் தவிர ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்படாத காடுகளை வனத்துறை உதவியுடன் ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 16ன் கீழ், பாதுகாக்கப்படாத காடுகளை புதிய காப்புக் காடுகளாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாக்கப்படாத வனப்பகுதிகளில், காடு அழிப்பு, கட்டுமானங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் நீர் குறுக்கீடுகள் என எந்த ஒரு நிலப்பயன் மாற்ற செயல்பாடுகளையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த காடுகள் அமைந்திருக்கும் பகுதி எந்த துறையின் கீழ் இருந்தாலும் அவசியமான நிலப்பயன் மாற்றங்கள் செய்வதாக இருந்தால் வனத்துறையின் வழிகாட்டுதலுடன், சூழலியலாளர்களை கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தி, எழுத்து பூர்வமாக அனுமதிபெற வேண்டும் எனும் நடைமுறையை உருவாக்க வேண்டும்” என்றார்.