தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும் என ஏங்க வைக்கும் ஊர் என்றால் அது ஊட்டியாகத்தான் இருக்கும். சினிமாக்களில் வரும் தாவரவியல் பூங்காவைப் பார்த்தாலே போதும். இவ்வளவு பசுமையும், குளிர்மையும் நிறைந்த ஊட்டியை நாம் ஏன் இன்னும் பார்க்கவில்லை என நமக்குள் ஒரு கேள்வி நிச்சயம் எழும். ஊட்டிக்கு ஒருமுறை சென்றுவந்துவிட்டால் அதன் நினைவுகள் நமக்கு ஆயுளுக்கும் மறக்காது. ஊட்டிக்கு சென்று வருபவர்கள், அங்கு கிடைக்கும் ஊட்டி வர்க்கியை சுவைக்காமல் வருவது கிடையாது. வெடவெடக் குளிரில், ஆவி பறக்கும் தேநீரில், கைக்கு அடக்கமான ஊட்டி வர்க்கியை தொட்டு சாப்பிட்டால் அமிர்தம் போல இருக்கும். ஊட்டி மட்டுமின்றி குன்னூர், கோத்தக்கிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் இன்றைக்கும் சிறந்த மாலை நேர சிற்றுண்டி என்றால் அது ஊட்டி வர்க்கிதான். ஊட்டி மக்களின் வீடுகளுக்கு சென்றால், அவர்கள் உபசரிப்பதே ஊட்டி வர்க்கியால்தான். ஆங்கிலேயர்கள் மாலை நேரங்களில் குக்கீஸ் என்ற பிஸ்கட்டை சாப்பிடுவது வழக்கம்.
அவர்கள் இனிப்பு, காரம் மற்றும் உப்பு கலந்த குக்கீஸ்களையே அதிகமாக விரும்பி சாப்பிட்டு வந்திருக்கின்றனர். நமது இந்திய நாட்டை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் வீடுகளில் பல தமிழர்கள் சமையல் வேலைக்கு சேர்ந்தார்கள். இந்த தருணத்தில்தான் உணவு கலாச்சாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்களது குளிர்ப்பிரதேச சூழலை அனுபவிக்க ஊட்டிக்கு அடிக்கடி சென்று தங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அப்போது குக்கீஸை ஆங்கிலேயர்கள் விரும்பி சாப்பிட்ட நிலையில், நம்மவர்கள் குக்கீஸ்களுக்குப் பதிலாக வர்க்கியைத் தயாரித்து வழங்கி இருக்கிறார்கள். மைதா உணவினை விரும்பி சாப்பிடும் ஆங்கிலேயர்கள் நெய்யில் வறுத்து எடுத்த வர்க்கியையும் ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஊட்டி வர்க்கி பிரபலம் ஆனது. நன்கு சுத்தம் செய்யப்பட்ட மைதா மாவில் குறிப்பிட்ட அளவு டால்டா, நெய், சர்க்கரை கலந்து அதை கலக்கி பரோட்டாவிற்கு மாவு தயார் செய்வது போல தயார் செய்துகொள்வர்.
இதில் நொதித்தலுக்காக ஈஸ்ட்டையும் சேர்த்து குறைந்தது 3ல் இருந்து 4 நாட்கள் ஊற வைப்பார்கள். பின்னர், இதை நெய்யில் வறுத்தெடுப்பார்கள். இதுதான் ஊட்டி வர்க்கியின் ஃபார்முலா. இதனுடைய ருசி தனித்துவம் வாய்ந்தது என்பதால் இதற்கு புவி சார் குறியீடும் கிடைத்திருக்கிறது. அனைத்து ஊர்களிலும் மைதாமாவு கிடைத்தாலும், சர்க்கரை கிடைத்தாலும் ஒவ்வொரு ஊரின் தண்ணீருக்கென்று ஒரு பிரத்யேக ருசி இருக்கும். காவிரித் தண்ணீரின் ருசியும், வைகை நீரின் சுவையும் பல உணவுகளுக்கு அடையாளம் வழங்கியிருக்கின்றன. தாமிரபரணி ஆற்று நீரில் தயாரிக்கப்படும் அல்வாவிற்கு எப்படி ஒரு தனி ருசி இருக்கிறதோ, அதேபோல ஊட்டி மலையில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் தயார் செய்யப்படும் ஊட்டி வர்க்கிக்கும் ஒரு தனித்துவ சுவை நிரம்பியிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் ஊட்டி வர்க்கியின் ருசி மாறாமல் இருப்பதற்கு அவை கைகளால் மட்டுமே தயார் செய்யப்படுகிறது என்பதுதான்.