Sunday, February 25, 2024
Home » இரவிலும் கிடைக்குது அன்லிமிட் மீல்ஸ்!

இரவிலும் கிடைக்குது அன்லிமிட் மீல்ஸ்!

by Lavanya

கடற்கரைகள் எப்போதும் அழகு நிறைந்தவைதான். அலைகளின் சப்தம் நம் காதுகளில் ரீங்காரமிட, கடலில் வெகு தொலைவில் ஒரு கப்பலோ, படகோ மிதந்து செல்ல, கடற்கரை ஓரத்தில் ஈரக்காற்றில் அமர்ந்தபடி இந்தக்காட்சிகளைப் பார்ப்பதே ஒரு கொடுப்பினைதான். இத்தகைய காட்சிகளைப் பார்த்தபடி, சுவையான கடல் உணவுகளை உண்டு ருசித்தால் எப்படி இருக்கும்? அந்த ஆனந்த அனுபவத்தை அப்படியே வழங்குகிறது பட்டினப்பாக்கம் பீச்சில் அமைந்துள்ள நாகாஸ் மெஸ். சாப்பாட்டிற்காக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு கமகமக்கும் உணவினை பரிமாறிக்கொண்டிருந்த நாகாஸ் மெஸ்ஸின் உரிமையாளர் சுரேஷைச் சந்தித்தோம். ஒருபுறம் கடைகளில் உணவிற்காக அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். மறுகணம் “ இந்த டேபிளுக்கு நாலு மீன் சாப்பாடு, ஒரு சுறாபுட்டு, ஒரு கடம்பா, ஒரு எறா வறுவல், ஒரு நெத்திலி” என்று ஆர்டர் சொல்கிறார்.

இதற்கிடையே நம்மிடமும் பேசினார். “ ஆரம்ப காலகட்டத்தில ஆட்டோ ஓட்டும்போதும் சரி. இப்ப நாகாஸ் மெஸ்ஸ நடத்தி வரும்போதும் சரி உணவு என்று வந்து விட்டால் அவர்களுக்கு உடனடியாக ஏதோ ஒன்று செய்து கொடுத்து விடுவேன். அது ருசியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். இந்த பட்டினப்பாக்கம்தான் எனக்கு பூர்வீகம். அதனால் எந்த வகை மீன் எந்தெந்த சீசனில் கிடைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். சில மீன்களை காசிமேட்டில் இருந்து வாங்கி வருவேன். கடலில் கிடைக்கும் எறா, சுறா, வஞ்சிரம், கடம்பா, நண்டு என அனைத்தையும் நல்ல முறையில் சுத்தம் செய்து சரியான மசாலாவைக் கொண்டு தயார் செய்தாலே ருசியாக இருக்கும்.
மீன்களை சுத்தம் செய்வதற்கென்றே 10 பேர் இருக்கிறார்கள். சுத்தம் செய்த அனைத்து மீன் வகைகளையும் ஒரு பெரிய தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்து கொடுப்போம்.

இதன் ருசி வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்க்கும். அனைத்து உணவுகளையும் மிதமான சூட்டில் மட்டுமே தயார் செய்கிறோம். இதுபோன்று தயார் செய்தால் மட்டுமே மசாலாவின் சுவை மீன், எறா உள்ளிட்ட உணவுகளில் நன்கு இறங்கும். சீசனைப் பொறுத்து இலிபூச்சியும் கொடுத்து வருகிறோம். இது நண்டு வகையைச் சேர்ந்தது. மணல் நண்டு, ஆளி பூச்சி, மோல் நண்டு, மச்ச நண்டு, கடல் எலி, உறல், பொத்திப் பூச்சி என பல பெயர்களை கன்னியாகுமரி பகுதிகளில் சொல்கிறார்கள். பார்ப்பதற்கு சிறிய வகை வண்டினத்தைச் சேர்ந்த நண்டு போன்று இருக்கும். ஆனால், நண்டை விட சுவை பிரமாதமாக இருக்கும். இது மார்க்கெட்டில் கிடைக்காது. நாங்கள் இங்குள்ள லோக்கல் மீனவர்களை வைத்து கடலில் இருந்து பிடித்து வருகிறோம்.

ஏனென்றால், அவர்களுக்குத்தான் இந்த இலிபூச்சிகளைப் பற்றி நன்கு தெரியும். குறிப்பிட்ட பகுதியில் நடந்து போகும்போது, காலில் குழி தட்டுப்படும். அதிலிருந்து இந்த இலிபூச்சிகளைப் பிடிப்போம். இதனை நல்ல பக்குவத்துடன் உள்ள மசாலாவில் செய்து சாப்பிடும்போது மொறுமொறுவென ருசியாக இருக்கும்” என்று கூறிய சுரேஷ் இலிபூச்சிக்கான மசாலாவை நம்மிடம் காண்பித்தார். மதியானம் மீல்ஸில் சாதம், மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, சாம்பார், காரக்குழம்பு, மீன் வறுவல், முட்டை, ரசம் இருக்கும். இதைத் தவிர, சைடிஷ்ஷாக இறால் தொக்கு, சுறா புட்டு, மீன் வறுவல், நண்டு, கடம்பா, பாறை, வவ்வால் கொடுக்கிறோம். சாப்பாட்டைப் பொருத்தவரையில் அன்லிமிட் தான். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இங்கு சாப்பிட வரும் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். கடுமையான உழைப்பாளிகள். அவர்களுக்கு அளவு சாப்பாடு சாப்பிட்டால் வயிறு நிறையாது. சாப்பிட்டால் வயிறு நிறைய வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் அன்லிமிட்டாக உணவை வழங்கி வருகிறோம். சைடிஷ்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விலையில் கொடுக்கிறோம். இரவில் இதோடு சேர்த்து பரோட்டா, சப்பாத்தியும் கொடுக்கிறோம். இதற்கு சிக்கன் குழம்பும், மீன் குழம்பும் கொடுக்கிறோம். என்னதான் நம் மக்கள் இரவில் இட்லி தோசை என்று சாப்பிட்டாலும், இரவில் சோறு சாப்பிட்டால் மட்டுமே உணவு சாப்பிட்டது போல் இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு இரவிலும் மீல்ஸ் வழங்கி வருகிறோம். குழம்பு, ப்ரை என்று அனைத்து மசாலாக்களையும் என் மனைவி கவிதாதான் தயார் செய்கிறார். இதனால் அனைத்து டிஷ்களும் வீட்டு கை பக்குவத்தில் இருக்கும். இதன் காரணமாக குழந்தைகளோடு வந்து எங்களது உணவகத்தில் சாப்பிட்டு செல்கிறார்கள்’’ என்று பூரிப்புடன் கூறி முடித்தார் சுரேஷ்.

சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

சங்கு கறி தொக்கு

தேவையானவை:

சங்கு கறி – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு
பிரிஞ்சி இலை, அன்னாசி பூ – 1
மிளகு, சீரகம் – 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது –
2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

சங்கை உடைத்து கறியை மட்டும் எடுத்து அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கறி அலசும்போது சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அலசிக்கொள்ள வேண்டும். பின்னர், கறியை குக்கரில் இட்டு 6-7 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வெந்த கறியை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு காயந்ததும் பட்டை லவங்கம், அன்னாசி பூ சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள சங்குக் கறியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதில் லேசாக தண்ணீர் தெளித்து மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து, நன்கு கிளறி விடவும். கறி மசாலாவுடன் நன்கு கலந்து ஒன்றானதும், மிளகு சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். இப்போது சுவையான சங்கு கறி தயார்.

You may also like

Leave a Comment

6 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi