கிருஷ்ணராயபுரம்: தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்றார். அப்போது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சுங்கச்சாவடி வழியாக, இரவு நேரங்களில் செல்லும் அரசு பேருந்துகள், தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றுள்ள உணவுகளில் நிறுத்தப்படுகிறதா என திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசு அனுமதி பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதனை கண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை அழைத்து, அரசு அனுமதி பெற்ற உணவகங்களில் நிறுத்தாமல், அனுமதி பெறாத கடைகளில் ஏன் நிறுத்தினீர்கள்? இங்கு வழங்கப்படும் உணவு விலை அதிகம் மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பயணிகள் முறையிட்டால் நீங்கள் பதில் சொல்வீர்களா? அல்லது அரசு பதில் சொல்லுமா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் அரசு அனுமதி பெறாத உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என்று ஓட்டுநர், நடத்துனருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், இதுபோன்று நிறுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் அரசிற்கு தெரிந்தால் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.