சென்னை: நாடு முழுவதும் செயல்படும் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைகள், ஒன்றிய அரசின் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும். அதனுடன் சேர்த்து, ஒன்றிய கல்வி துறையின் கீழ் செயல்படும், தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ‘நாக்’ அந்தஸ்து சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். இதை பெற்றால்தான், பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிக்கு உரிய நிதியுதவி ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும். இதற்கு, பல்வேறு வழிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். கல்லூரி மற்றும் பல்கலையின் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வசதிகள், மாணவர், பேராசிரியர் பதவிகள், ஆய்வகங்கள் நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பல்கலையின் ஆராய்ச்சி செயல்பாடுகள் போன்றவற்றின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த அறிக்கையில் உள்ள தகவல்களை, ‘நாக்’ கவுன்சில் குழுவினர், கல்வி நிறுவனத்துக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு, அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்வர். ஆய்வின் அடிப்படையில் ஏ, ஏ பிளஸ் பிளஸ், பி, பி பிளஸ் உள்ளிட்ட தர மதிப்பீட்டை வழங்குகிறது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2014ம் ஆண்டு ஏ மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் பிளஸ் தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. அந்த வகையில் ஏ பிரிவிலிருந்து சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஏ பிளஸ் பிளஸ் தரத்திற்கு உயர்ந்துள்ளது.