சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் மூன்று அரசு பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமனம் செய்ய, தேடுதல் குழுக்களை அமைத்து பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் அலுவலக செய்திகள் கூறுகின்றன. இந்த தேடுதல் குழுக்களில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நியமன உறுப்பினர்களாக, பிற மாநில பல்கலைக்கழகங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது, மூன்று பல்கலைக்கழகங்களுக்கு தேடுதல் குழுக்களை தமிழ்நாடு அரசு, அந்தந்த பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படி அமைத்து, அரசின் கெசட்டில் வெளியிட்ட பிறகு, அந்த குழுவினை திருத்தி அமைத்து, வெளியிடும் அதிகாரம் ஆளுநருக்கு சட்டப்படி கிடையாது. பல்கலைக்கழக சட்ட விதிகளில் அப்படி ஆளுநருக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. ஆளுநரின் இந்த ‘தானடித்த மூப்பான’ நடவடிக்கை-பல்கலைக் கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களைப் பறிப்பதாகும். தமிழ்நாடு அரசோடு மோதலை ஏற்படுத்தவும், தாங்கள் விரும்பும் வெளிமாநிலத்தவரை நியமன உறுப்பினர் நியமனம் மூலம் திணிப்பதும் எவ்வகையில் சரியானது?. ஆளுநரின் சட்ட விரோத செயல்களை தடுக்க முன்வருதல் அவசரம், அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.