சென்னை: இனி வரும் கல்வியாண்டுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டு, ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாநில கல்வி கொள்கையில் உயர்கல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார்.
பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: பாடத்திட்டங்களை பொறுத்தவரையில், எல்லா பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வி ஆணையத்திடம் சொல்லி, அவர்களும் பாடத்திட்டங்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறார்கள். பல்கலைக்கழகங்கள் அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக, முதல் 2 செமஸ்டர்களில் தமிழ் இலக்கிய வரலாறு ஆங்கிலேயர் வருகைக்கு முன், பின் என 2 பகுதிகளாக நடத்தப்பட உள்ளது. 3-வது செமஸ்டரில் தமிழ்நாட்டின் வரலாறும், பண்பாடும், 4-வது செமஸ்டரில் தமிழ் வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் என்ற தலைப்பில் நடத்தப்பட இருக்கிறது. ஆங்கில மொழிப் பாடத்திலும் இதே போல் 4 செமஸ்டர்களுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கான தமிழ் பாடத்திட்டங்களை நிர்ணயிக்க 4 பேர் கொண்ட குழுவும், ஆங்கில பாடத்திட்டங்களை உருவாக்க தனிக்குழுவும் உருவாக்கப்பட உள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், இந்த ஆண்டில் இருந்தே தமிழ், ஆங்கில மொழி பாடத்திட்டங்கள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்படும். மற்ற பாடத்திட்டங்களை பொறுத்தவரையில், உயர்கல்வி ஆணையம் அனுப்பியுள்ள பாடத்திட்டங்களில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு தேவையான சில மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
அதாவது, 75% உயர்கல்வி ஆணையம் அளித்த பாடத்திட்டங்களைதான் பின்பற்றவேண்டும். இனி வரும் கல்வியாண்டுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு தேர்வுகள், பள்ளியில் பொதுத் தேர்வுகள் எப்படி ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறதோ? அதேபோல், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை அந்தந்த பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நடத்தி வந்தன.
இனிமேல் பட்டப்படிப்பு தேர்வு முடிவு வந்ததும், தமிழக அளவில் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பு இடங்கள் இருக்கின்றன என்ற விவரங்களை வெளியிட்டு, அதற்கு ஒரே நேரத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இடங்கள் நிரப்பப்படும். இது அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். மாநில கல்வி கொள்கைக்கு சம்பந்தம் இல்லாத திட்டங்களை சேர்க்க மாட்டோம். தேசிய கல்வி கொள்கையை பின்பற்றாவிட்டால், மத்திய அரசு, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவதும் தவறு. ஆளுநர் ஏற்பாடு செய்திருக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில் துணைவேந்தர்கள் கலந்து கொள்வது என்பது அவர்களுடைய விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.