சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் கீழ் இருக்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிதிப் பற்றாக்குறையை களைவது குறித்தும், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை சரி செய்வது குறித்தும் தீவிரமாக விவாதித்தார்.
தமிழ்நாடு மாநிலப் பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உயர்கல்வித் துறையால் தயாரித்து வழங்கப்பட்ட பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கால அட்டவணைகளை கொண்டு கல்லூரிகளை நடத்துவதற்கும், மாணவர்களுக்கான மதிப்பெண்களை அளிக்கும் முறையையும் அவற்றை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் நிதிச் சுமை காரணமாக கல்வியின் தரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் எனவும் நிதிச்சுமை குறித்து முதல்வரிடம் கலந்த ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இக் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்னாதன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, கொடைக்கானல் அன்னை தெரேசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், சென்னை திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.