சென்னை: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர், காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை மாநாடு நடைபெற்றது. பிற்பகலில் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கவுள்ள நிலையில் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை மாநாடு தொடங்கியது. வனவிலங்குகள், காடுகள் பாதுகாப்பு, காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர்,
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்:
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனிதர்கள் – விலங்குகள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆட்சியர்களும், வனத்துறையினரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வளங்கள், வன விலங்குகளை பாதுகாக்க ஆட்சியர்களும், வனத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். கடல் அரிப்பை தடுத்து, கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.
சங்க கால மரங்களை மீண்டும் நட அறிவுறுத்தல்:
சதுப்பு நில பகுதிகள், பவளப் பாறைகளை பழமை மாறாமல் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். சங்க கால மரங்களான 18 வகைகளை மீண்டும் நட்டு, மண்ணின் வளத்தை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்தார். வன விலங்குகள், இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் மக்களையும் ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். சிறந்த வனத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.