கோவை:கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார், தெலங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகின்ற அறிவிப்பை வெளியிட்டு, இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த இருக்கிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இல்லாத விஷயத்தை கூறி திசை திருப்ப பார்க்கிறார்கள். இது குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை எங்கும் பேசியதில்லை. பாராளுமன்றத்தில் விவாதித்ததும் இல்லை. யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என பிரதமர் மோடி தெளிவாக கூறி விட்டார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வந்த போதும், மறு சீரமைப்பு யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் மறுசீரமைப்பாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்துள்ளார். அவர் ஏற்கனவே இது பற்றி பலமுறை கூறியுள்ளார். ஆனால், இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செய்யப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமும், சவுராஷ்ட்ரா தமிழ் சங்கமும் ஆகிய நிகழ்ச்சிகள் ஒன்றிய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கடவுளான முருகன் மாநாட்டினை தமிழ்நாட்டில் நடத்துவது தான் சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.