புதுடெல்லி: சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறையில் புதிய ஆண்டு கட்டண முறையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.3000 செலுத்தி பாஸ் வாங்கினால் ஓராண்டில் 200 சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவது என்பது பெரும் பிரச்னையாக இருந்து வந்தது. கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதால் உரிய நேரத்தில் சென்றடைவதில் தாமதம் போன்ற பல்வேறு இன்னல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனர். இதிலிருந்து விடுபடும் விதமாக பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இது சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பெரிதும் உதவி வருகிறது.
பாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது. மேலும் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளை அதிகளவில் பயன்படுத்தும் வாகனங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் புதிய முறையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ஓராண்டுக்கு ரூ.3,000 கட்டணம் செலுத்தி, 200 சுங்கச்சாவடிகள் வழியாக கட்டணமின்றி பயணிக்கும் புதிய பாஸ்டேக் பாஸ் முறையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தன் எக்ஸ் பதிவில், “கார்கள், ஜீப்புகள், வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஓராண்டு பாஸ்டேக் பாஸ் முறை செல்லுபடியாகும். இது ஆகஸ்ட் 15ம் தேதி முதல் கொண்டு வரப்பட உள்ளது. பயனர்கள் ஓராண்டுக்குள் 200 பயணங்களை முடித்து விட்டால், மீண்டும் ரூ.3,000 செலுத்தி பாஸ்டேக் பாசை வாங்கிக் கொள்ளலாம். இந்த ஆண்டு பாஸ்டேக் முறை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுங்சாலைகளில் தடையற்ற மற்றும் குறைந்த செலவில் சுங்கச்சாவடிகளை கடக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும். 2025 ஆகஸ்ட் 15 முதல் ஒரு சுங்கச்சாவடியை கடப்பதற்கான சராசரி செலவு ரூ.15ஆக இருக்கும். மேலும், இந்த முறையானது 60கிமீ தூரத்துக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் உள்ள நீண்டகால பிரச்னைகளை நீக்கும்” என தெரிவித்துள்ளார். இந்த பாஸ்டேக் பாஸ் குறித்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.