சென்னை: மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கலைஞர் என்று ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நாணயத்தை வெளியிட்டு பேசுகையில், ‘‘திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாள் கொண்டாடும் இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் இங்கு வருகை தந்துள்ள அனைவரும் எழுந்து நின்று கை தட்டி நமது மரியாதையை தெரிவிக்க வேண்டுகிறேன்’’ என்றார்.
உடனே, விழாவுக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி மரியாதை செய்தனர். பின்னர் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்த கலைஞர், நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவர். பொது நலனுக்காக இவரின் பங்களிப்பு போற்றத்தக்கது. தமிழ் அடையாளத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க பிராந்தியவாதத்தை கலைஞர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவரின் அரசியல் பயணம் மிகவும் துணிச்சல் மிக்கதாக இருந்தது. இந்திய ஜனநாயகத்தின் வலிமை பல்வேறு குரல்களுக்கும் அடையாளங்களுக்கும் இடமளிக்கும் திறனில் உள்ளது என்பதை அவர் புரிந்து கொண்டார்.
மாநில உரிமைகள் குறித்த அவரது வலியுறுத்தல் ஒன்றியத்திற்குள் அதிகாரத்தை மிகவும் சமநிலையான மற்றும் சமமான பகிர்வுக்காகவும் குரல் கொடுத்தவர். கூட்டாட்சிக்கான இந்த அர்ப்பணிப்பு இந்தியத்தன்மையின் முக்கிய அம்சமாகும். இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம், கூட்டாட்சி அமைப்பு இந்த பன்முகத்தன்மையே ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பிற்குள் செழிக்க அனுமதிக்கிறது. கலைஞர் வேற்றுமையில் ஒற்றுமையை கண்டவர். இந்திய அடையாளத்தை உள்ளடக்கிய தன்மை கலைஞரின் கொள்கைகளில் பிரதிபலிக்கிறது, இது ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தியது.
கடந்த 1973ம் ஆண்டுவரை சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்றும் உரிமை மாநில ஆளுநர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில், மாநில உரிமைக்காக அந்தந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமைக்காக கலைஞர் குரல் கொடுத்தார். அவரின் கோரிக்ைக ஏற்கப்பட்டது. அதற்கு பிறகு 1974ம் ஆண்டு தேசிய கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட்டு, தேசிய கொடி ஏற்றிய முதல் முதலமைச்சர் இவர்தான். பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக கடுமையாக வாதிட்ட கலைஞர் கருணாநிதியே, பாலின சமத்துவத்தை ஊக்குவித்து பெண்களுக்கு அதிகாரம் அளித்த சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக இருந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அவரது அரசு இயற்றியது, மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான நல வாரியங்களை உருவாக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
தேசிய வளர்ச்சிக்கு பிராந்திய வளர்ச்சி ஒருங்கிணைந்ததாகும் என்பதை அவரது மரபு நினைவூட்டுகிறது. கூட்டுறவு கூட்டாட்சி என்ற கருத்தை இது சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜனநாயகம் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியின் சக்தியை நம்புகிறது. இந்தியா தனது 1.4 பில்லியன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், ஜனநாயகத்துடன் கூடிய வளர்ச்சியை அளிக்கிறது மற்றும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்ற நம்பிக்கையையும் மக்களுக்கு வழங்குகிறது.
வளர்ச்சிக்கான அரசின் அர்ப்பணிப்பு பாரபட்சமான அரசியலுக்கு அப்பாற்பட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களை நிறுவுவதற்காக எடுக்கப்பட்ட முடிவை ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இந்த வழித்தடங்கள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதையும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. முதலீட்டை ஈர்ப்பதற்கும், புதுமைகளை வளர்ப்பதற்கும், இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்திக்கான வலுவான சூழலை உருவாக்குவதற்கும் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். படைப்புகள் தமிழ் இலக்கியத்தையும் சினிமாவையும் வளப்படுத்தின. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள், பரந்த இந்திய அடையாளத்திற்கு ஒருவரின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதும் கொண்டாடுவதும் அவசியம் என்பது அவரது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளன இவ்வாறு அவர் பேசினார்.