புதுடெல்லி: இசட் பிளஸ் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தன்னுடைய வீட்டில் கூடுதலாக பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தும் முடிவை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார் ஏற்க மறுத்து விட்டார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார்) தலைவருமான சரத் பவாருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு விஐபிக்களுக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. மகாராஷ்டிரா பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் என்னை கண்காணிப்பதற்காக ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சரத் பவார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சரத் பவாருக்கு வழங்கப்பட உள்ள பாதுகாப்பு பற்றி விவாதிப்பதற்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இதில், சிஆர்பிஎப், டெல்லி போலீஸ், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது சரத் பவாரின் வீட்டில்,கூடுதலாக பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், டெல்லியில் அவர் பயணம் செய்வதற்கு தற்போது உள்ள வாகனத்துக்கு பதிலாக வேறு வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த வாகனத்தில் 2 பாதுகாப்பு வீரர்கள் அமர்ந்திருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை சரத் பவார் ஏற்க மறுத்து விட்டார். ஆனால், அவருடைய வீட்டில் உள்ள காம்பவுண்ட் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அதிகாரிகளின் யோசனைக்கு சரத் பவார் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று சரத் பவார் கூறினார்.