உலகெங்கும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு இந்திய நகரங்கள் விதிவிலக்கல்ல. இதற்கு ஒரேதீர்வு பொது போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதுதான். இந்திய நகரங்களில் பஸ், மின்சார ரயில்கள் மட்டுமே பொது போக்குவரத்து வசதிகளாக இருந்தது ஒரு காலம். பின்னர் வந்தது மெட்ரோ ரயில்கள். செலவு அதிகம் என்றாலும், சொகுசான, விரைவான பாதுகாப்பான பயணம் என்பதால் மெட்ரோ ரயில்களுக்கு மவுசு அதிகம்.
தமிழ்நாட்டில் 2009ல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் முதல் முதலாக மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது, துணை முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இன்றைக்கு திருவொற்றியூர் விம்கோ நகர்-விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல்- பரங்கிமலை என 2 வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் மட்டும் அதிகபட்சமாக 95,35,019 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2-ம் கட்டமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 3 வழித்தடத்தில் 116.1 கி.மீ தூரத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. அதற்கான திட்ட மதிப்பீடு மட்டும் ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஆகும். இந்த பணிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2021-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். சில மாதங்களிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தது.
இந்த திட்டத்தை ஆகஸ்ட் 2021ல் ஒன்றிய அரசின் திட்டமாக பொது முதலீட்டு வாரியம் அறிவித்தது. அடுத்த கட்டமாக ஒன்றிய அமைச்சரவையின் பொருளாதார விவகார குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வர துவங்கிவிடும் என்ற நம்பிக்கையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை துரிதப்படுத்தியது திமுக அரசு. ஆனால், மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டது. இதுவரை பொருளாதார விவகாரத்துக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் தரவே இல்லை. ஒன்றிய அரசும் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.
தமிழ்நாடு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் திமுக அரசு செய்துள்ளது. இதனால், சென்னை நகரின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் குறிப்பாக சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு பணம் தராததால் ரயில் நிலைய கட்டுமானம் உள்ளிட்ட சில பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது வரும் காலத்தில் சென்னைக்கு பெரிய ஆபத்தாகும் சூழலை உருவாக்கியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை தற்போது 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள்(டன்னல் போரிங் மெஷின்) சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் ஒரு சில இயந்திரங்கள் 115 அடி ஆழத்தில் தோண்டி வருகின்றன. இதில், என்ன பிரச்னை? ஒரு ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள 2வது ரயில் நிலையத்துக்கு சுரங்கம் தோண்டப்படும். தோண்டும் பணி முடிந்ததும், 2வது ரயில் நிலையத்தில் இயந்திரம் கழற்றி எடுக்கப்பட்டு, மீண்டும் அடுத்த சுரங்கம் தோண்டும் பணியில் இறங்கும். இதற்கு 2வது ரயில் நிலைய கட்டுமான பணிகள் கணிசமான அளவு முடிந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு நிதியே தராமல் ஏமாற்றிவரும் நிலையில், பல மெட்ரோ ரயில் நிலைய பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது.
விளைவு, சுரங்கம் தோண்டி முடித்த பிறகும் இயந்திரங்களை வெளியே எடுக்க முடியாத நிலை. தற்போது, மந்தைவெளி, மூலக்கடை ரயில் நிலையங்களுக்காக சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஆனால், அங்கே ரயில் நிலைய கட்டுமான பணி முடிவடையாததால் சுரங்கம் தோண்டும் டிபிஎம்கள் பூமிக்கடியில் முடங்கி கிடக்கின்றன. இப்படி, சுரங்கம் தோண்டாமல் சும்மா கிடக்கும் டிபிஎம்களால் சென்னை நகருக்கு பேரபாயம் காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது என்ன பெரிய அபாயம்? பல அடி ஆழத்தில் டிபிஎம்கள் இயக்கப்படாமல் சும்மா இருக்கும்போது, அழுத்தம் காரணமாக சாலைகளில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரிகளே அச்சம் தெரிவிக்கின்றனர்.
இப்போதைக்கு மந்தைவெளி, மூலக்கடை ரயில் நிலையங்களுக்கு அருகே 2 டிபிஎம்கள் இயங்காமல் முடங்கி கிடக்கின்றன. அடுத்த சில மாதங்களில் பெரம்பூர், கீழ்ப்பாக்கம், திருமயிலை மெட்ரோ ரயில் நிலையங்களை சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் நெருங்கிவிடும். ஆனால், ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்திருக்காது. எனவே, அங்கும் டிபிஎம்கள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்படும். இந்த 5 இடங்களிலும் சாலைகளில்100 அடிக்கு ராட்சத பள்ளங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன.
ஆனால், அதை தடுப்பது எப்படி என்பது குறித்து மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆராயத் துவங்கி உள்ளனர். இதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களோடு அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். சென்னையை பேராபயத்தில் இருந்து அதிகாரிகள் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அதையும்மீறி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து உயிர், பொருள் சேதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? ஒரு பைசா நிதி கூட தராத ஒன்றிய அரசு தானே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
* பிற மாநிலங்களுக்கு தாராள நிதி
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு பிற மாநிலங்களில் நடக்கும் மெட்ரோ திட்டங்களுக்கு மட்டும் தாராளமாக நிதி வழங்கி உள்ளது.தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதற்காக கடந்த 2 ஆண்டுகளில் இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி வழங்கியுள்ளது. அதில் கர்நாடகாவிற்கு ரூ.7,658 கோடி, மராட்டியத்திற்கு ரூ.6,958 கோடி, குஜராத்துக்கு ரூ.6,557 கோடி, டெல்லிக்கு ரூ.5,925 கோடி, உத்தரபிரதேசத்திற்கு ரூ.4,542 கோடி, ஒன்றிய பிரதேசத்திற்கு ரூ.2,196 கோடி, பீகாருக்கு ரூ.1,138 கோடி, கேரளாவிற்கு ரூ.146 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடைபெறும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. அரசுக்கு அதிக வருவாய் தருவதில் 2-ம் இடத்தில் இருக்கும் தமிழகத்துக்கு மட்டும் நிதி ஒதுக்குவதில் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.