திருமலை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி தீர்த்துள்ளதால், ஆந்திராவில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் மட்டும் விநாடிக்கு 10 லட்சம் கனஅடி வெள்ளம் கரையை தாண்டி ஓடியது. இதனால், அதன் கரையோர பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக என்டிஆர் மாவட்ட தலைநகரான விஜயவாடா நகரத்தையொட்டி பாயும் கிருஷ்ணா நதி, பூதமேறு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விஜயவாடா நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் 50 சதவீத பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கிக்கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆந்திராவில் பெய்த கனமழையால் சுமார் 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சஞ்சீவ் குமார் ஜிண்டல் தலைமையிலான ஒன்றிய குழுவினர் நேற்று வந்தனர். அவர்கள், வெள்ளம் பாதித்த விஜயவாடா, என்.டி.ஆர் மாவட்டம் கொண்டப்பள்ளி சாந்திநகர்- கவுளூர் மதகு பகுதி, பிரகாசம் அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டனர். வெள்ள சேத விவரங்கள் குறித்து மாநில அரசு அதிகாரிகள் ஒன்றிய குழுவினருக்கு எடுத்துக் கூறினர்.