Sunday, March 16, 2025
Home » ஒன்றிய அரசின் ஒரே ஆயுதம் ஈடி, ஐடி தானா? தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஓராண்டில் தேர்தல்: எதிர்க்கட்சிகளை பணிய வைக்க பா.ஜ பயன்படுத்தும் வழக்கமான தந்திரம்

ஒன்றிய அரசின் ஒரே ஆயுதம் ஈடி, ஐடி தானா? தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஓராண்டில் தேர்தல்: எதிர்க்கட்சிகளை பணிய வைக்க பா.ஜ பயன்படுத்தும் வழக்கமான தந்திரம்

by Ranjith

* கடந்த 2014 முதல் ஈடி விசாரித்த அரசியல் தலைவர்கள் 121, அதில் எதிர்க்கட்சி தலைவர்கள் 115

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக துவங்கிவிட்டதோ என்னவோ? ஈடியும், ஐடியும் தேர்தலில் களமிறங்கிவிட்டன. இல்லை களமிறக்கிவிடப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை(ஈடி), வருமான வரித்துறை (ஐடி)- இன்றைக்கு இந்தியாவில் சர்ச்சைகளில் சிக்கும் முக்கிய ஒன்றிய அரசு துறைகள். இவை இரண்டுமே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஏவல் வேலைகளை செய்வதையே முக்கிய பணியாக கொண்டவை என்று எதிர்க்கட்சிகள் வர்ணிக்கின்றன.

தமிழ்நாடு என்றாலே பாஜ தலைமையை பொறுத்தவரை ச்சீ, ச்சீ இந்த பழம் புளிக்கும் கதைதான். எத்தனை முறை, எப்படியெல்லாமோ முயன்றாலும் தங்களால் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியவில்லையே என்ற கவலை பாஜ, சங்பரிவார் தலைமைக்கு எப்போதுமே உண்டு. ஆனால், அதற்காக பின்வாங்குபவர்களாக அவர்கள், இல்லை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டை குறிவைத்து காய் நகர்த்திக் கொண்டே இருப்பது அவர்களது வாடிக்கை.

ஆனால், பாஜவை பொறுத்தவரை எதை செய்தாலும் அது தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ் மொழிக்கு விரோதமானதாகவே இருக்கிறது. காவிரி டெல்டாவில் பூமியை குடைந்து ஹைட்ரோகார்பன், மதுரையில் பூமியை பிளந்து டங்ஸ்டன், தூத்துக்குடியில் தாமிரம், தேனியில் மலையில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகம், பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் ஆழ்கடல் எண்ணெய் கிணறுகள் என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்காக அறிவிக்கும் திட்டங்கள் எல்லாமே மக்களை, சுற்றுச்சூழலை, கடுமையாக பாதிக்கும் வகையில்தான் உள்ளது. இந்த திட்டங்களால் பாஜ மீது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருவித ஒவ்வாமை.

நீட் நுழைவுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்க நடக்கும் முயற்சி, தொகுதி மறுசீரமைப்பு என்று கூறி தென் மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பது என்று ஒன்றிய பாஜ அரசு செய்யும் திருகுதாளங்களை, உடனடியாக கண்டுபிடித்து அதை எதிர்த்து போர்கொடி தூக்குவதில் முதல் ஆளாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

ஏதோ அறிக்கை வெளியிட்டோம், பிரதமருக்கு கடிதம் எழுதினோம் என்பதோடு மற்றவர்கள் போல் நின்றுவிட்டாமல், கடைசிவரை ஒன்றிய அரசுக்கு எதிராக பிற மாநிலங்களையும் திரட்டி போராடுவதால் தலைவலியோடு திருகுவலியும் வந்துவிடுகிறது ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு. முதல்வர் மு.க.ஸ்டாலினை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் ஒன்றிய அரசும், பாஜ தலைமையும் தடுமாறித்தான் போய் உள்ளன. மேலும், இந்தி திணிப்பு பிரச்னையில், தமிழகத்தை பார்த்து வேறு சில மாநிலங்களும் விழித்துக் கொண்டு ஒன்றிய அரசை கேள்வி கேட்க துவங்கி உள்ளது மோடி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 10ம் தேதி நிறைவு பெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வரின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கி போன ஒன்றிய அரசு தன்னுடையே ஒரே ஆயுதமான ஈடி, ஐடியை தமிழ்நாட்டில் தற்போது களமிறக்கிவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் குடைச்சல் கொடுப்பதற்காக ஒன்றிய பா.ஜ அரசு பயன்படுத்தும் ஈடி, ஐடியும் இப்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு மக்களிடம் உள்ள நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தங்கள் ரெய்டுகளை துவங்கி உள்ளனர்.

இதன் மூலம் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் முடக்கி போடலாம் என்பது பாஜவின் திட்டம். ஆனால், பாஜவின் இந்த யுக்தி பல மாநிலங்களில், பலமுறை தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில், மக்களவை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ரெய்டுகளினால், திமுக கூட்டணியின் 39க்கு 39 வெற்றியை தடுக்க முடியவில்லை. இதே ஈடி, ஐடி யுக்திதான் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பயன்படுத்தப்பட்டது.

ஜார்கண்டில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அங்கு பாஜ படுதோல்வியை சந்தித்தது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவை தடுமாற வைக்க பல ரெய்டுகள் உதவின. அங்கு, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசையே இந்த ரெய்டு அரசியல் மூலம் உடைத்ததும் பாஜதான். கர்நாடக காங்கிரஸ் அரசின் முதுகெலும்பாக உள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை அடி பணிய வைக்க அமலாக்கத்துறை போட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தாலேயே ரத்து செய்யப்பட்டது.

தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், ஈடி, ஐடி உதவியுடன் பல மாநிலங்களில ஆட்சி அமைத்துள்ள பாஜ, இப்போது தமிழ்நாட்டிலும் ஈடி, ஐடியை இறக்கியுள்ளது. ஆனால், அவர்களது நடவடிக்கையால் எந்த பலனும் பாஜவுக்கு ஏற்படாது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் மக்களவையில் அவற்றுக்கான பிரதிநிதித்துவத்தை கணிசமாக குறைக்க ஒன்றிய அரசு திட்டம் போட்டுள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத வட மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரித்து அந்த மாநிலங்களில் வெற்றி பெற்றாலே ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் பாஜவின் கனவு திட்டம். ஆனால், பாஜவின் இந்த ரகசிய ஆபரேஷனை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதோடு, மற்ற தென் மாநிலங்களையும் ஒன்றிணைத்து போராட திட்டம் வகுத்து பாஜவின் திட்டத்தில் மண்ணை போட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுவும் பாஜவின் கோபத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது ஆண்டாண்டு காலமாக தென்னிந்திய மக்களின் மனக் குறை. ஈடி, ஐடி உதவியோடு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மிரட்டி பணியச் செய்வது, தென் இந்தியாவை ஓரம் கட்டுவது தொடர்ந்தால், தென்னக மக்கள் ஓரணியில் திரள்வது நிச்சயம். இது பாஜவுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே இருண்டகாலமாகிவிடும் அபாயம் உள்ளது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

* குஜராத் மாடலை வீழ்த்திய திராவிட மாடல்
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, அம்மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததாக கூறி குஜராத் மாடல் என்று பிரசாரம் செய்தே ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்தது பாஜ. ஆனால், குஜராத் மாடல் சில பெரும் பணக்காரர்கள் மட்டுமே வளர்நத கதை என்பது பொருளாதார நிபுணர்களின் விளக்கம். ஆனால், கடந்த 2021 முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

அனைவருக்குமான இந்த திராவிட மாடல் வளர்ச்சியின் புகழ் மற்ற மாநிலங்களையும் சென்றடைந்துள்ளது. பெரும்பாலான வளர்ச்சி, மனித வள குறியீடுகளில் குஜராத் மாடலை திராவிட மாடல் வீழ்த்தி, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் செலுத்தி வருகிறது. போதுமான நிதி தராத நிலையிலும் தமிழ்நாடு ஜெட் வேகத்தில் முன்னேறுவதும் பாஜ அரசின் வெறுப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

* அது வேற வாய் முதல்வர் மோடி பிரதமர் மோடி
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2011ல் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதாக போர்க்குரல் எழுப்பினார். கூட்டாட்சி தத்துவத்துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஆபத்து என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அரசியல் ஏஜென்டுகளாக செயல்படுவது, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, மாநிலங்களின் அதிகாரத்தை பறித்துக்கொள்வது என்று ஒன்றிய அரசு தவறான பாதையில் செல்வதாக அவர் கூறினார்.  இதனால், மோடி பிரதமர் ஆனதும் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து நடப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், 2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்தே, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதையே ஒன்றிய அரசு முக்கிய வேலையாக செய்து வருகிறது.

அத்தோடு, மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் கைவைத்தது, வெள்ள நிவாரணம் கூட தர மறுப்பு, திட்டங்கள் அறிவிப்பில் பாரபட்சம், மும்மொழி என்ற பெயரில் இந்தி திணிப்பு, இந்தி திணிப்பை ஏற்காத தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர மறுப்பது, ஈடி, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை நிலைகுலைய செய்வது என்று இன்றைக்கு மோடி அரசின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைப்பதாகவே அமைந்துள்ளது. மோடி அரசின் இந்த செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

seven + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi