புதுடெல்லி: நோயாளிகளின் நலன்களைப் பாதுகாக்க மருத்துவ பிரதிநிதிகள் ஒன்றிய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பிரதிநிதிகளை மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து ஒன்றிய அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவில்,’மருத்துவப் பிரதிநிதிகளை மருத்துவமனை வளாகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவமனைகளின் தலைவர் இந்த விஷயத்தில் தேவையான கடுமையான வழிமுறைகளை அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். எந்தவொரு சிகிச்சை, விசாரணை அல்லது நடைமுறை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை மின்னஞ்சல் அல்லது பிற டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள மருத்துவ பிரதிநிதிகள் கோரப்படலாம். மருத்துவப் பிரதிநிதிகள் மருத்துவமனை வளாகங்களுக்குள் உள்ள மருத்துவர்களை தங்கள் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்ட மருந்துகளை பரிந்துரைக்க தேவையற்ற முறையில் செல்வாக்கு செலுத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு மருத்துவமனைகளில் அரசு டாக்டர்களை சந்திக்க மருத்துவ பிரதிநிதிகளுக்குத் தடை
0