மதுரை: நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களே தவறான தகவல்களை தரலாமா என ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 24.2.2018ல் வெளியானது. திருச்சியில் நடந்த தேர்வில் பங்கேற்றோம். உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்றோம். இதனால் ராணுவ வீரர் பணியிடத்திற்கு தேர்வானோம். ஆனால், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் எங்கள் பெயர்கள் இல்லை.
இதுகுறித்து கேட்டபோது காலியிடம் இல்லாததால் பணி நியமனம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. என்சிசி (சி) சான்று உள்ள எங்களை தேர்வு செய்யாதது விதிமீறலாகும். எனவே, எங்களுக்கு பணி நியமனம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
சில தகவல்கள் தவறாக உள்ளன. அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கைகளில் பல தவறுகள் உள்ளன. சில அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு கூட சரியான தகவல்களை தருவதில்லை. நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத்துறையினரே இதுபோன்ற முரண்பட்ட, தவறான தகவல்களை தரலாமா? இதுவே இப்படி என்றால், பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்றார். பின்னர், இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.