கோவை: கோவையில் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் ஒருவர் அரசு அறிவித்தபடி தனக்கு கடன் தர வங்கிகள் மறுப்பதாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரூ.3,500 கோடி அளவில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு கடன் உத்தரவுகளை நிர்மலா வழங்கிக் கொண்டிருந்தபோது தொழில்முனைவோர் சதீஷ் என்பவர் தனக்கு கடன் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மேடையில் ஏறி குறையை தெரிவிக்க நிர்மலா அழைப்பு விடுத்ததால் மேடையிலேயே தனக்கு கடன் கிடைக்கவில்லை என சதீஷ் புகார் கூறினார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் கேட்டு இரண்டரை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தபோதும் தனக்கு கடன் மறுக்கப்படுகிறது. ரூ.40 லட்சம் கடனுக்கான உத்தரவாதத்தை வழங்க தயார் என்று கூறிய பிறகும் கடன் கிடைக்கவில்லை என்று சதீஷ் குற்றம்சாட்டினார்.
வங்கி கடன் வழங்க மறுப்பது குறித்து பிரதமர் அலுவலகம் வரை சென்று முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். சதீஷின் முறையீடு பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். ஒன்றிய அரசின் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கடன் கிடைக்கவில்லை என தொழில்முனைவோர் ஒருவர் முறையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.