டெல்லி: ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் குடும்பங்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் தனிப்பட்ட விவரங்களை பேட்டியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். தேசிய நலன் கருதி முக்கியமான நேரங்களில் கட்டுப்பாட்டுடன் ஊடகங்கள் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது
ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பங்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம்,” என மீடியாக்களுக்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் நாட்டு மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குறித்த பேட்டிகள், விவரங்கள் உள்ளிட்டவை குறித்த செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ஆயுதப்படையினரின் தியாகம் , சாதனை, நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட மீடியாக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை, நாட்டு மக்கள் புரிந்து கொள்வதில் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின், ஒரு பகுதியாக ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரிகள், தங்களின் தலைமைப்பண்பு காரணமாக பொது மக்களின் கவனத்திற்கு வருகின்றனர். தற்போது அதிகாரிகளின் பணிகளை தாண்டி, அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தினர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
மீடியாவை சேர்ந்தவர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்வதோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயல்வதும், அலுவலக பணிகளை சாராத விஷயங்களை செய்தியாக்க முயற்சி செய்கின்றனர் என தெரிய வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கை சரியில்லாதது. வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு, கண்ணியம், மற்றும் தனியுரிமையை சமரசம் செய்யும் வகையில் உள்ளது. மூத்த அதிகாரிகள், முக்கிய பணியை செய்யும்போது, அவர்களின் குடும்பத்தினர் தனிப்பட்ட குடிமக்களாக நீடிக்கின்றனர். அவர்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்.