கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கொரோனாவிற்கு பிறகு இதய நோய் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் 2023க்கு பின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இதயம் காக்கும் மருந்துகளான லோடிங் டோஸ் மருந்துகள் இருப்பில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரத்து 505 பேர் உயிர் காக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் பிரசவ இறப்புக்கள் குறைந்துள்ளது.
குழந்தைகளின் இறப்பும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற திட்டத்தின் அடிப்படையில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசிடம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை அனுமதி வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திட்டங்கள் நிறைவேறுவதற்கு உரிய அனுமதியை ஒன்றிய அரசு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு தெரிவித்தார்.