சென்னை: திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி:
மாநில வளர்ச்சியில் திமுக அரசு எந்த அளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கைகளை எல்லாம் எப்படி தடுப்பது என்பதற்கான முயற்சியிலே ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, நாமெல்லாம் ஓரணியில் திரள்வோம், அதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம், அந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்ற அளவில் இன்றைய ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்த செயல்திட்டத்தைத் தமிழக முதல்வர்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நாளை (இன்று) அவருடைய ஆலோசனைகளோடு, அவருடைய கருத்துரைகளோடு இந்த திட்டம் தொடங்க இருக்கிறது. லாக் அப் மரணம் நேற்று முந்தா நாள் நடந்தது. நேற்று 6 காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை தொடர இருக்கிறது.
ஆனால் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை எதிர்த்து 100 நாள் போராடி வந்த மக்களேயே 12 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற எடப்பாடி அரசு அதன் முதல்வரை கேட்ட பொழுது, நான் டிவியைப் பார்த்துதான் அந்தத் துப்பாக்கி சூட்டையே தெரிந்து கொண்டேன் என்று சொன்னார். அத்தகைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று எங்களைப் பார்த்து லாக்கப் மரணம் நடந்துவிட்டது என்கிறார். அந்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அந்த குற்றத்தில் உண்மை இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தொடர்ந்து திமுக அரசு மெய்பித்து வருகின்றது. 24 வழக்குகளை நீங்கள் சொல்கிறீர்கள். 24 வழக்குகளிலும் திமுக அரசு- மு.க.ஸ்டாலின் அரசு பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
எந்த வழக்கிலும் குற்றவாளி அகப்படாமல் போகவில்லை. இந்தக் கட்சியை முன்னெடுத்து செல்வதற்காக இளைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என்று சொல்வது அவர்களை தயாரித்து, அவர்களை அடுத்த கட்டத்திற்கு இந்த திமுகவை, நம்முடைய பண்பாட்டையும் நம்முடைய மொழி அருமையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு தங்களை தயாரித்து கொள்வதற்கு, இப்பொழுதே வாய்ப்பு கொடுங்கள் என்பதுதான் பொருளே தவிர, மூத்தவர்கள் எல்லாம் விலகுவது என்பது அல்ல. ஒரு பதவி பொறுப்பை ஒருவரிடம் கொடுத்தால் அவர் அந்த பொறுப்பில் உள்ள துன்பங்களை, அந்த பொறுப்பில் உள்ள சிரமங்களை அல்லது அந்த பொறுப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காக இது சொல்லப்பட்ட வார்த்தை.இவ்வாறு அவர் கூறினார்.