பெங்களூரு: இந்திய விமான படையில் புதியதாக சேருவோருக்கு பயிற்சி கொடுப்பதற்காக எச்.ஏ.எல் நிறுவனத்திடம் ரூ.6,828 கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள் வாங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் விமானம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஒன்றிய அரசின் பொதுதுறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உள்ளது. பயணிகள் விமானம், போர் விமானம், பயிற்சி விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவைகள் தயாரித்து வருகிறது. இந்திய விமான படையை பலப்படுத்த வேண்டும் என்ற யோசனையில் உள்ள ஒன்றிய அரசு, இந்திய விமான படைக்கு புதியதாக பயிற்சி விமானங்கள் வாங்க அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதை செயல்படுத்தும் வகையில் எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து எச்டிடி-40 ரக 70 பயிற்சி விமானங்களை ரூ.6,828.36 கோடி செலவில் வாங்க ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த பயிற்சி விமானங்களை வரும் 6 ஆண்டுகளில் படிப்படியாக வாங்கி விமான படையில் சேர்த்து கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. ஒன்றிய அரசின் திட்டம் மூலம் எச்.ஏ.எல் தொழிற்சாலைக்கு வர்த்தகம் பெருகுவதுடன் 1,500 பேருக்கு நேரடியாகவும் 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.