Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது; வக்பு வாரிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: டெல்லி மாநாட்டில் தெலுங்கு தேசம் தலைவர் சூளுரை

புதுடெல்லி: டெல்லியில் நடந்த மாநாட்டில் வக்பு வாரிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் மூத்த தலைவர் பேசியதால், ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒன்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அத்துடன் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்த கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நேற்று ஜமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பினர் ஏற்பாடு செய்த ‘சம்விதான் பச்சாவோ சம்மேளன்’ என்ற கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் நவாப் ஜான் பேசுகையில், ‘ஒன்றிய அரசு வக்பு சட்ட வாரிய மசோதாவை கொண்டு வர முயற்சித்து வருகிறது. அந்த முயற்சியை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்.

அவருக்கு இந்துக்களும், முஸ்லிம்களும் இரு கண்களை போன்றது. அதனால் ஒரு கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது முழு உடலுக்கும் ஏற்பட்ட பாதிப்பை போன்று உணருவார். எனவே எந்தச் சூழலிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட மசோதாவை நிறைவேற்ற அவர் அனுமதிக்கமாட்டார்’ என்றார். மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலத்தை இழந்த பாஜக, மூன்றாவது முறையாக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றியத்தில் ஆட்சியமைத்து உள்ளது. இந்த கூட்டணிக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்ட மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணி கட்சிகள் எதிர்க்கும் என்பதால் மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.