டெல்லி : ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி டெல்லியில் சந்தித்தார். அப்போது ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,670.64 கோடியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு இந்திய உணவு கழகம் வழங்கும் அரிசியினை முழுவதுமாக புழுங்கல் அரிசியாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில தொகுப்பில் இருந்து வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் இருந்து காரிப்பருவ கொள்முதல் அளவை 16 லட்சம் டன்னில் இருந்து, 19.24 லட்சம் டன்னாக உயர்த்திட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களின் எடையை அளப்பதற்கான புதிய பயோமெட்ரிக் முறைக்கான தொழில்நுட்பத்தில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டி இருப்பதால் அதனை முழுமையாக செயல்படுத்த 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.