சென்னை இந்த ஆண்டில் மட்டும் 74 தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கனிமொழி எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி மக்களவையில், இந்திய மீனவர்கள் பிரச்னை பற்றி மக்களவையில் எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: இந்திய மீனவர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படு ம் தகவல் அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
ஈரானை பொறுத்தவரை, இதுவரை 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2020-22 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஈரான் நாட்டில் 27 இந்திய மீனவர்களும், இலங்கையில் 501 இந்திய மீனவர்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் 309 இந்திய மீனவர்கள், பஹ்ரைன் 12, மியான்மர் 19, பாகிஸ்தான் 1060, கத்தார் 54, சவுதி அரேபியா 564, செஷல்ஸ் 61 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 2020 முதல் 2022 வரை வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 2612 ஆக இருக்கிறது.
அரசின் தொடர்ச்சியான முயற்சியால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 588 இந்திய மீனவர்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.