கடவுளின் தேசமாக கருதப்படும் கேரளா கடந்த ஒரு வாரமாக கண்ணீரில் மிதக்கிறது. வயநாட்டில் நடந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350ஐ தாண்டிய நிலையில், அங்குள்ள மக்கள் நிர்க்கதியற்று நிற்கின்றனர். சூரல்மலை, முண்டக்கை, புஞ்சரிமட்டம் ஆகிய 3 கிராமங்களை நிலச்சரிவு அடியோடு அழித்துவிட்டது. இன்னும் 400க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மட்டுமின்றி, தேசிய பேரிடர் மீட்பு படையினர், பல மாநில தீயணைப்பு மீட்பு படையினர் மாயமானவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறவுகளில் யாரேனும் ஒருவர் உயிரோடு இருக்கிறார்களா என முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் தேடி அலையும் அவலம் கண்ணீரை வரவழைக்கிறது. எதையுமே தட்டிக்கழிக்கும் பொறுப்பற்ற ஒன்றிய அரசு, இதையும் ஒரு துயர சம்பவமாக கூறிக்கொண்டு கடந்து போகவே எத்தனிக்கிறது. கேரளாவில் நடந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. சமீபத்தில் இப்படியொரு பேரழிவு எங்குமே நடந்ததில்லை என்றாலும், ஒன்றிய அரசு வழக்கம்போல் மவுனமே சாதிக்கிறது.
கேரள மாநில அரசு மட்டுமே அந்த 3 கிராமங்களையும் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடங்கி, பக்கத்து மாநிலங்கள் அனைத்தும் இந்த பேரழிவுக்கு தங்களால் இயன்ற உதவிகளை பணமாகவோ அல்லது வீடு கட்டி தந்தோ உதவ முற்படுகின்றன. ஆனால் ஒன்றிய அரசோ வழக்கம்போல் கடுகளவு நிதியை ஒதுக்கி விட்டு இதை கடந்து போகவே முற்படும் என தெரிகிறது.
கடந்தாண்டு வெள்ளத்தில் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தபோது கூட, ஒன்றிய அரசு ஏதோ தமிழ்நாடு என்கிற மாநிலம், தனியே இருப்பது போலவே நடந்து கொண்டது. வெள்ள நிவாரண நிதி தராமல் இழுத்தடித்தது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய அரசு எதையுமே தேசிய பேரிடர் என அறிவித்தது இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது என ஆருடம் கூறிவிட்டு சென்றார். இப்போது கேரளாவில் நடந்த அழிவுகளையும் நிச்சயம் தேசிய பேரிடராக அறிவிக்க போவதில்லை.
இத்தகைய அழிவுகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை மட்டுமே ஒன்றிய அரசு அனுப்பி வைக்கும். மற்றபடி தேசிய பேரிடர் என்ற அறிவிப்போ, அதற்கேற்ற நிதியோ தர இயலாது என்பதை ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற அனைத்து மாநிலங்களில் இருந்து வரி வருவாயை வாரி சுருட்டிக் கொள்ளும் ஒன்றிய அரசுக்கு, அவற்றை பேரழிவு காலத்தில் கூட திருப்பி தர மனம் ஒப்பவில்லை.
ஆங்கிலேயர் காலத்து சட்டங்களை எல்லாம் திருத்தி, சும்மா கிடக்கிற சங்கை ஒன்றிய அரசு ஊதிக் கெடுக்கிறது. ஆனால் தேசிய பேரிடர் தொடர்பான விதிமுறைகளில் மட்டும் ஒருபோதும் கை வைப்பதில்லை. இந்தியா என்கிற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு மாநில மக்கள் துயரில் சிக்கும்போது, அதை தேசிய பேரிடர் என அறிவிக்கும்போது மட்டுமே, கூட்டாட்சி தத்துவம் வலுப்படும். இத்தகைய பேரழிவுகளில் ஒன்றிய அரசு ஒதுங்கி செல்லாமல், உற்ற தோழனாக தோள் கொடுக்க முன்வர வேண்டும். இதற்கு தேவையான விதிமுறைகளை ஒன்றிய அரசு மாற்றினால் அனைத்து கட்சிகளுமே அதை வரவேற்கும்.