மதுரை: ‘சொந்த வீடு இன்றி கஷ்டப்பட்ட எனது வேதனை அறிந்து வீடு கட்டித்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ என்று மதுரை சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி தெரிவித்தார். ஒன்றிய அரசு கைவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் மகத்தான உதவியாக சின்னப்பிள்ளைக்கு கலைஞர் கனவு இல்லம் கிடைத்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் கடந்த 2000ம் ஆண்டு மகளிர் மேம்பாட்டிற்கென ‘ஸ்த்ரி சக்தி புரஸ்கார்’ விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை. அப்போது வாஜ்பாய், இவரது காலில் விழுந்து ஆசி பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னப்பிள்ளை, ‘‘தனக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை’ என்று சில மாதங்களுக்கு முன் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு உடனே வழங்கிட உத்தரவு பிறப்பித்தார். மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, திருவிழாப்பட்டி கிராமத்தில் அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு சென்ட் வீட்டு மனையுடன், கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
இதனையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகமும், மாத்தூர் ஊராட்சியும் விரைந்து செயல்பட்டு அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர். முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அப்போதைய மதுரை கிழக்கு தாசில்தார், பில்லுசேரியில் உள்ள அவரது வீட்டிற்கே நேரில் சென்று சின்னப்பிள்ளையை சந்தித்து வீடு ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார். தொடர்ந்து வீடு கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, அறை, ஹால், சமையலறை வசதியுடன், டைல்ஸ் தரை, வெஸ்டர்ன் டாய்லட்டுடன், வண்ணம் ஜொலிக்க வீடு அழகுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அந்த இல்லம் சின்னப்பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்குவதாக உறுதியளித்த ஒன்றிய அரசு கைவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் மகத்தான உதவியாக சின்னப்பிள்ளைக்கு இந்த கலைஞர் கனவு இல்லம் தற்போது கிடைத்துள்ளது. இதுகுறித்து சின்னப்பிள்ளை கூறுகையில், ‘‘விரைவில் முதல்வரின் உத்தரவுக்கு பிறகு வீட்டிற்கு பால் காய்ச்சி குடியேற இருக்கிறேன். எனது வேதனை அறிந்து வீடு கட்டி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.