சென்னை: ஒன்றிய அரசின் திட்டங்கள் இன்றைக்கு கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் கிடைக்கிறது என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனை தொடர்பாக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று அளித்த பேட்டி: 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கிராமப்புறங்களில் நூறு சதவீதம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 9 ஆண்டுகளில் 11 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 9.60 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு விறகு அடுப்பு சமையலால் வரும் நோய்களில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தை சரியாக கையாண்ட ஒரே நாடு இந்தியா. ஏழைகளுக்கு மூன்றரை கோடி வீடுகளை பிரதமரின் திட்டத்தின் மூலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் வீடுகளை மக்கள் பார்க்கிறார்கள். ஒன்றிய அரசின் திட்டங்கள் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் கிடைக்கிறது. நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.