இந்தியா கூட்டணியின் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மதுரை நேதாஜி ரோடு, ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பிடிஆர். பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கச்சத்தீவு குறித்து ஆர்டிஐயில் வெளியாகி உள்ளது என பச்சைப்பொய் புரளியை எழுப்பி உள்ளனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர். வாழ்வா, சாவா என்ற அடிப்படையிலான தேர்தல் இது. ஜனநாயகம் ஏற்கனவே செத்துவிட்டது.
ஜனநாயகம் மீதும் நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். தேர்தல் நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்து, எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கை முடக்கி சமமான தேர்தலை சந்திக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர். ஏன் 10 நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்கிறார்? புதிய சட்டத்தின்படி இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர். இது ஒன்றிய அரசு செய்யும் ஒன் சைடு கேம்.
அன்றைக்கு சர்வாதிகார பிரிட்டிஷ் மன்னர் லண்டனில் இருந்தார். இன்று டெல்லியில் உள்ளார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும். இவ்வாறு பேசினார். ‘கொடூரமான ஆளுநரை, கொடுத்ததை படிக்கத் திறனற்ற ஆளுநரை பொறுப்பில் வைத்துள்ளனர். பல கோடி ரூபாய் எதற்காக செலவு செய்கிறோம் என தெரியாமல், எந்தப்பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழ்நாட்டில் திணித்துள்ளனர்’ என்று அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.