டெல்லி : அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அணுசக்தி திட்டங்களை தேசிய அணுமின் கழகம், தேசிய அனல்மின் கழகம் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றன. தற்போது, அணுசக்தி துறையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அணுசக்தி தொடர்புடைய உபகரணங்களை உற்பத்தி செய்யவும் வடிவமைப்பு பணிகளை தொடங்கும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களை அணுசக்தி துறையில் அனுமதிக்கும் வகையில், புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி , 1962ம் ஆண்டு அணுசக்தி திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத் தொடரில் இதற்கான 2 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.