அருப்புக்கோட்டை: ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்க்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் அருப்புக்கோட்டையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; திமுக ஆட்சியின் சாதனைகள், நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம். திமுக உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல, தமிழ் மண், மானத்தை காக்கக் கூடிய இயக்கமாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் இருக்கும்.
தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களையும் திமுகவினர் நேரில் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுப்பர். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் இளைஞர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், வாக்குச்சாவடி முகவர்கள் ஓரணியில் தமிழ்நாடு பணியில் ஈடுபடவுள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு – தமிழ்நாட்டை பாதுகாப்பதற்கான முன்னெடுப்பாகும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் குடும்பங்களை ஒன்றிணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்லாமல் தேர்தல் பரப்புரையாகவும் அமையும். கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்துகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைகளை மதிக்காமல் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வன்மத்தோடு பார்க்கிறது என்று கூறினார்.