*விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கிய தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்காத பட்சத்தில் மீண்டும் மறுவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின் கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
அதன்படி கலைஞரின் கனவு இல்லம் ஊரக வீடுகள் மறு சீரமைப்பு திட்டம், பிரதம மந்திரி ஆயாஸ் யோஜனா மற்றும் பி.எம். ஜன்மன் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் குடியிருப்பு வீடுகளில் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், விழுப்புரம் மாவட்டத்தில் 2016-2017 முதல் 2022-2023 வரை பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு கட்டி முடிக்கப்படாமல் உள்ள பயனாளிகளுக்கு மறு வாய்ப்பு வழங்கி விரைந்து கட்டி முடிக்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டில் குடியிருப்பு கட்டுமான பணிக்கான கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களை விரைந்து வழங்கி கட்டுமான பணிகளை ஓரிரு மாதங்களில் முடித்திட அறிவுறுத்தப்பட்டது.
இது மட்டுமல்லாமல் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலைக்கு ஏற்ப பயனாளிகளுக்கு அதற்கான தொகையை விரைந்து வழங்கிட வேண்டும். மேலும் 2024-2025ம் ஆண்டின் வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து பணியை விரைந்து முடித்திட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பத்மஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.