சென்னை: ஒன்றிய அரசின் மருந்து குடோனில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை பெரியமேட்டில் ஒன்றிய அரசின் மருந்து பகுப்பு ஆய்வகம் உள்ளது. இந்த ஆய்வகத்தில் உள்ள குடோனில் கடந்த மார்ச் 27ம் தேதி ஒன்றிய அரசின் மருந்து பகுப்பு ஆய்வக மேலாளர் சோலைராஜன்(58) தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மருந்துகளை பதப்படுத்தும் பொருட்கள் அடங்கிய 21 பெட்டிகள் வைத்துள்ளார். பின்னர் மருந்து ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்ப நேற்று முன்தினம் காலை குடோனை திறந்து பார்த்த போது, 21 பெட்டிகளில் 10 பெட்டிகள் மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம். பிறகு குடோனை சுற்றிபார்த்த போது அடையாளம் தெரியாத நபர்கள் குடோனின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து 10 பெட்டிகள் திருடி சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து, ஒன்றிய அரசின் மருந்து பகுப்பு ஆய்வக மேலாளர் சோலைராஜன் அளித்த புகாரின் படி பெரியமேடு போலீசார் குடோன் அமைந்துள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.