சென்னை: அகில இந்திய இட ஒதுக்கீடான 15% இடங்களில் நிரம்பாத இடங்களை மாநில அரசிடமே கொடுப்பது தான் சரியானது என் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் தான் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் மத்திய பல்கலை கழகங்கள் தான் கலந்தாய்வை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து அந்தந்த மாநில பல்கலை கழகங்கள் கலந்தாய்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாநில கல்லூரியில் உள்ள 100% இடங்களில் 15% இடத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து இந்த 15% இடத்தை கொடுக்க வேண்டும்.
இந்த இடங்களை மத்திய அரசுதான் நிரப்பும். மேலும் நிகர்நிலை பல்கலை கழகங்களிலும், மத்திய பல்கலை, ஜிப்மர், எய்ம்ஸ் இந்த 4 வகையான கல்லூரியில் 100% இடங்களை மத்திய அரசுதான் நிரப்புகிறது. அதாவது மருத்து கலந்தாய்வு குழுதான் நிரப்புகிறது. பின்னர் தான் மாநில அரசுகள் கலந்தாய்வை தொடங்குகிறது. இந்த 15% இடங்களுக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள 15,475 எம்.பி.பி.எஸ், 2,150 பி.டி.எஸ் இடங்களில் 15% மத்திய அரசுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கு முன்னர் மத்திய அரசின் கலந்தாய்வு மூலம் நிரப்படாத இடங்களை மாநில அரசிடமே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது அவை நிரப்பபடும் வரை கலந்தாய்வு நடத்துவதற்கு சட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர். இதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்தத மாநில
அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீதம் உள்ள இடங்களை தங்களிடமே கொடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். 15% இடங்களில் நிரப்படாத இடங்களை மாநில அரசிடமே கொடுப்பது தான் சரியான முறை என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசின் இந்த செயலால் மற்ற இட ஒதுக்கீட்டு மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாநில இடங்களை அந்தந்த மாநில மாணவ-மாணவிகளுக்கு கொடுப்பதே சரியான முடிவாகும். மேலும் பிற மாநிலங்களில் சேர்ந்து படிப்பதை மாணவர்களின் பெற்றோர்களும் விரும்புவதில்லை. குறிப்பாக மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை நினைத்து கவலை கொள்கின்றனர். எனவே சொந்த மாநிலங்களிலேயே தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது.