பாமகவில் இதுவரை இல்லாத வகையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே உச்சகட்ட அதிகார மோதல் நிலவுகிறது. தலைவர் பதவியில் நீடிப்பதாக கூறி அன்புமணி களப்பணியை தொடர, செயல் தலைவராக பணியாற்றுவதே பிரச்னை முடிய ஒரே தீர்வு என ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனிடையே சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே கட்சிக்கும், ஆட்சிக்கும் கலைஞர் தலைமை வகித்தபோது ஸ்டாலின் முணுமுணுக்கவில்லையே என்ற பதிலை தெரிவித்து அன்புமணியை மறைமுகமாக சாடிய ராமதாஸ், தனது 60வது திருமண நாளில் பங்கேற்காமல் புறக்கணித்தது தொடர்பாக வேதனை தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி வருகிற தேர்தலில் என் பக்கம் நிற்பவர்களுக்குத்தான் தேர்தலில் ேபாட்டியிட சீட் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தந்தையா, மகனா? என்ற பந்தாட்டத்தில் யார் பக்கம் செல்வதென தெரியாமல் அடிமட்ட தொண்டர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாமகவில் இரு அணிகளிலும் பதவியை பெற்றுள்ளவர்கள் தொடர்ந்து தாங்கள் யார் பக்கம் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதேவேளையில் ராமதாஸ், அன்புமணி இருவரையும் பகைக்காமல் உள்ள சில நடுநிலையாளர்கள் தங்களது பதவியை தொடர்ந்து தக்க வைத்து வருகின்றனர். இருப்பினும் பாமக ெபாதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கையில் நிறுவனரான ராமதாஸ் முழுவீச்சில் இறங்கும்போது மட்டுமே அவர்களின் உண்மையான முகம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இரு தரப்பும் ரகசியமாக களமறிந்து, தங்களுக்கு சாதகமான நிர்வாகிகளை கடந்த 2 மாதமாக மாற்றி மாற்றி நியமித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வரவுள்ள பொதுத்தேர்தலில் கட்சியின் சின்னமான மாம்பழம் யாருக்கு? என்ற கேள்வி எழுவதற்கான வாய்ப்பும் உள்ளதால் பாமக அடிமட்ட தொண்டர்கள் வேதனையில் உள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் இரட்டை சிலை சின்னம் சிலகாலம் முடக்கப்பட்டதுபோல் தங்களது கட்சிக்கும் அதேநிலை வந்து விடக்கூடாது என பாமகவினர் அஞ்சுகின்றனர்.