சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினம் கிராமத்தில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணியின்போது மண்சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், புதுப்பட்டினம் கிராமம், பூக்கார விளார் ரோடு, மேற்கு தெற்கு லாயம் இடையில் 5.08.2024 அன்று மாலை பாதாள சாக்கடை சீரமைப்புப்பணி மேற்கொள்ளும்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில், அப்பணியில் ஈடுபட்டிருந்த ஜெயநாராயணமூர்த்தி த/பெ. மாரிமுத்து (வயது 29) என்பவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இச்சம்பவத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், வளம்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 34) த/பெ. பெருமாள் என்பவர் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிறப்புச் சிகிக்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த ஜெயநாராயணமூர்த்தியின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்த தேவேந்திரன் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.