திருச்சி: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு திட்டம் என்பது விவசாயத்துக்கு சாவு மணி அடிக்க ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டமாகும். இதனால் ஒட்டு மொத்த வேளாண்மையும் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறையை ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்த இருப்பதாக ஒன்றிய அரசின் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்கு தேவையான நிலத்தடி நீரை பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உழவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுமா? வரியின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்பதெல்லாம் தெரியவில்லை. நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்: நீலத்தடி நீருக்கு வரிவிதிப்பு என்பது ஒட்டுமொத்த விவசாயிகள், வேளாண்மையை ஒடுக்கும் சட்டமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே ஒன்றிய அரசு இந்த அறிவிப்பாணையை திரும்ப பெற வேண்டும்.
மாநில அரசு, விவசாயிகள் கருத்துகளை கேட்காமல் ஒன்றிய அரசு இதுபோன்ற நடவடிக்கையை துவங்க கூடாது. இச்சட்டம் வந்தால் உணவு உற்பத்தி அடியோடு பாதிக்கப்படும். உணவு பஞ்சம் ஏற்படும். மாநில அரசு பிரதமருக்கு கடிதம் மூலம் மறுப்பு தெரிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடாவிட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு: அரசாங்க நிலம், பட்டா நிலம் என நிலத்தில் பல பிரிவுகள் உள்ளது. நிலம் அந்த உரிமையாளர்களுக்கு சொந்தமானது. அந்த இடத்தில் அவர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இந்நிலையில் நிலத்தடி நீருக்கு வரி போடும் திட்டம் தவறானது. ஜிஎஸ்டி உள்ளிட்ட மற்ற வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒன்றிய அரசு இதுபோன்ற புதிய வரி சட்டங்களை கொண்டு வந்து மக்கள், விவசாயிகள் தலையில் இடி விழ வைக்கிறது.
இது விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க பார்க்கும் செயல். இந்த சட்டத்தை எதிர்க்கிறோம். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக கோவையில் வரும் 5ம் தேதி நடைபெறும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்செல்வன்: வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே குடிப்பதற்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. அதேபோல் விவசாயத்துக்கும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இதை ஒப்படைத்து விவசாயத்துக்கு சாவு மணி அடிக்க ஒன்றிய அரசு திட்டம் தீட்டி விட்டது. நாகை மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் அன்புவேலன்: விவசாய பயன்பாட்டுக்கு உரிய நிலத்தடி நீரை பெற ஒன்றிய அரசு வரி விதிக்க திட்டம் வகுத்திருப்பது ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் உழவர்களை மேலும் வாட்டுவதாகும்.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற வரியை விதிக்கவில்லை. நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த நிறைய திட்டங்கள் வகுத்து சென்றனர். ஆனால், மோடி அரசு, வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீரை பயன்படுத்த வரி விதிப்பதை ஏற்க முடியாது. விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என ஏற்கனவே பல வகைகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து உழவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. அத்தகைய ஆபத்தான திட்டத்தை தொடக்க நிலையிலேயே ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் இந்தியா முழுவதும் விவசாயிகள் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
* தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்
ஒன்றிய அரசின் நிலத்தடி நீர் வரிவிதிப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்டா மாவட்டங்களிலும் ேபாராட்டம் நடந்தது. நாகை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர் ரயில் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் சார்புடைய தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசின் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், உடனடியாக அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
* நீதிமன்றத்தை நாடி முதல்வர் வெற்றி பெறுவார்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
தஞ்சையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம் தவறு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார். மசோதாக்களில் ஆளுநர் கையொப்பமிட மறுத்தது உள்பட பல்வேறு விஷயங்களில் நீதிமன்றத்தின் மூலமாக தமிழக முதல்வர் வெற்றி பெற்று வருகிறார்.
நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பு என்கிற ஒவ்வாத திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஒன்றிய அரசிடம் முறையிடுவார். அதற்கு ஒன்றிய அரசு செவி சாய்க்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.