புதுடெல்லி: பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி) தலைவர் ஜெகதீஷ்குமார் நேற்று கூறியதாவது: பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவற்றில், விரைவாக படிக்கும் மாணவர்கள் குறைவான காலத்துக்குள் இளநிலை படிப்புகளை படித்து முடிக்க விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது. அதாவது 4 ஆண்டு படிப்பை 3 ஆண்டில் படித்து முடிக்க வாய்ப்பு வழங்குவது. மெதுவாக படிக்கும் மாணவர்கள் விரும்பினால் 3 ஆண்டுக்கான இளநிலை படிப்புகளை 4 ஆண்டு காலம் எடுத்து படிக்க வாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த யூஜிசி கூட்டத்தில் துரிதப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு திட்டம்(ஏடிபி) மற்றும் விரிவாக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம்(ஈடிபி)) வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சம்மந்தப்பட்டவர்களின் கருத்துகள் கேட்பதற்கு வரைவு விதிமுறைகள் பொது களத்தில் வைக்கப்படும். மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களின் அடிப்படையில் தங்கள் படிப்பு காலத்தை குறைக்க அல்லது நீட்டிக்க இந்த விருப்பத்தைப் பயன்படுத்தலாம். ஏடிபி ஆனது ஒரு செமஸ்டருக்கு கூடுதல் வரவுகளைப் பெறுவதன் மூலம் குறைந்த நேரத்தில் மூன்று ஆண்டு அல்லது நான்கு ஆண்டு பட்டப்படிப்பை குறைந்த காலத்தில் முடிக்க மாணவர்களை அனுமதிக்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள் இந்த திட்டங்களுக்கான மாணவர்களின் தகுதியை மதிப்பிடுவதற்கு குழுக்களை நிறுவும் ’’ என்றார்.