சென்னை: பள்ளி இணைப்புத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கையை சென்னை ஐஐடி விரிவுபடுத்தியுள்ளது. தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின்னணு அமைப்புகள் ஆகிய 2 படிப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இவை 8 வார காலப் படிப்புகளாகும். இதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 25ம் தேதிக்குள் code.iitm.ac.in/schoolconnect என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது: வளர்ச்சிக்கான காலகட்டத்தில் மாணவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசத்திற்கு முதலீடு செய்கிறோம். ஏற்கனவே 2,300க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இதன்மூலம் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பள்ளி இணைப்புத் திட்டம் என்பது சென்னை ஐஐடியில் உள்ள அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் மையத்தின் முதன்மையான முயற்சியாகும். பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். இவ்வ்வாறு அவர் கூறினார்.