மேட்டூர் : கொளத்தூரில் விளையாத மிளகாய் நாற்று கொடுத்த நர்சரியை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஒன்றியத்தில், விவசாயிகளின் முக்கிய பணப்பயிர்களுள் முதன்மையானதாக மிளகாய் உள்ளது. கொளத்தூர் சம்பா மிளகாய் மிகவும் பிரசித்தி பெற்றது. நிறம், மணம், காரம் மிகுந்த சம்பா மிளகாய்க்கு, தமிழகம் முழுவதும் கடும் கிராக்கி உள்ளது.
கொளத்தூரில் வழக்கமாக சம்பா ரகம், கோவில்பட்டி ரகம், 1612 ஆகிய மிளகாய்களை பயிரிட்டு வந்தனர். நடப்பு ஆண்டில் கொளத்தூரில் உள்ள தேவன் நர்சரியில் புல்லட் 500 என்ற புதியராக மிளகாய் நாற்று, இலட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. கொளத்தூர், தின்னப்பட்டி, காவேரிபுரம், கருங்கல்லூர், கத்திரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் சுமார் 150 ஹெக்டேர் அளவிற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிளகாய் நாற்று நட்டு 40நாட்களில் பலன் தரும். ஆனால் இந்த புதிய ரகம், நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் தரவில்லை. விவசாயிகள் ஏக்கருக்கு ₹50 ஆயிரம் வரை செலவிட்டு பேரிழப்பை சந்தித்தனர். வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சலித்துப்போன விவசாயிகள், மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்தும், மிளகாய் செடிகளுடன் உழுது மாற்று பயிரிடவும் தயாராகி வந்தனர்.
பல்வேறு தரப்பினரிடமும் புகார் அளித்தும், தரமற்ற மிளகாய் நாற்றுகளை வழங்கிய நர்சரி மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று மாலை திடீரென நர்சரியை முற்றுகையிட்ட விவசாயிகள், மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேட்டூர்- மைசூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், அதுவரை தரமற்ற நாற்றுகளையும், விதைகளையும் வழங்கிய நர்சரி மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். 3நாட்கள் அதிகாரிகள் அவகாசம் கேட்டதால், விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.