சென்னை: புதுச்சேரியை சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை, கட்டாய பணி உத்தரவாதம் புரிவதாக உறுதியளிக்கவில்லை போன்ற காரணங்களை கூறி சித்தார்த்தனுக்கு மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வேண்டுமென்று கல்லூரி நிர்வாகம் கூறியதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த கல்வியாண்டிலேயே அந்த மாணவருக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்து அவர் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டார் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாணவர், மருத்துவ மேற்படிப்பை முடித்திருந்தாலும், 2017-18ம் கல்வி ஆண்டில் அவருக்கு அனுமதி மறுத்தது தவறு. இதற்காக 15 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இதில், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் 10 லட்சம் ரூபாயும், தேர்வுக் குழு (சென்டாக்) ஐந்து லட்ச ரூபாயையும் நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டனர். மேலும், சமூகத்திற்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு மனசாட்சியே இல்லாமல் தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் கல்வியை வணிக மயமாக்கியுள்ளனர். ‘‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’’ என்று கல்வி குறித்து திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த இரு கண்களும் தற்போது வணிக பொருட்களாக்கப்பட்டுள்ளது. அதனை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. தனியார் கல்லூரிகளில் இது போன்று நடக்காமல் இருக்க தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.