கோவை: கோவையில் கடந்த வாரம் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நள்ளிரவில் அவரது வீட்டிற்கு சென்ற காதலனை காதலியின் தாய்மாமா கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதனால் துக்கம் தாங்காமல் காதலியும் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(21). இவர் செட்டிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த தன்யா(20) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி தன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நள்ளிரவில் தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு மது போதையில் சென்ற பிரசாந்துக்கும் தன்யாவின் தாய் மாமாவான விக்னேஷ் (29), என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் கத்தியால் பிரசாந்தை குத்தி கொலை செய்தார்.
இதையடுத்து விக்னேஷை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர். பிறந்த நாள் வாழ்த்துக் கூற வந்த காதலன், தனது கண்முன்பாக கொலை செய்யப்பட்டதால் மன வேதனையில் இருந்த தன்யா மறுநாள் இரவு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தன்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை தன்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.