பெங்களூரு: மனைவியின் தொந்தரவு தாங்கமுடியால் வீட்டைவிட்டு ஓடிய இன்ஜினியர் கணவரை, ெபங்களூரு போலீசார் நொய்டாவில் சுற்றிவளைத்து பிடித்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை. அதையடுத்து அவரது மனைவி, தனது கணவரை காணவில்ைல என்று புகார் அளித்தார். அதில், ‘பணம் எடுப்பதற்காக ஏடிஎம்மிற்குச் சென்ற எனது கணவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ கடத்திச் சென்று விட்டனர். அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரை போலீசார் தேடி வந்தனர். நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இறுதியாக, ேநற்று முன்தினம் நொய்டாவில் புதிய சிம் ஒன்றை வாங்கி, தனது செல்போனில் இன்ஜினியர் பொருத்தி உள்ளார். அதனால் அவரது செல்போன் மீண்டும் ஆக்டிவ் ஆனது. அதையடுத்து தனிப்படை போலீசார் நொய்டா விரைந்தனர். நொய்டாவில் உள்ள மாலில் இருந்து வெளியே வந்த இன்ஜினியரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நாங்கள் சிவில் டிரசில் இருந்தோம். அவரை சுற்றிவளைத்து பிடித்த போது, அவர் சிரித்துக் கொண்டே அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள், ‘மீண்டும் நீங்கள் பெங்களூருவுக்கு திரும்ப வேண்டும்’ என்று சொன்னோம்.
அதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், ‘நீங்கள் என்னை சிறையில் கூட அடையுங்கள்; அங்கேயே நான் இருந்துவிடுகிறேன். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன்’ என்றார். கடைசியாக, அவரை சமாதானப்படுத்தினோம். ‘உங்களது மனைவி உங்களை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளதால், அந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று கூறினோம்.
அதன்பின் அவர் பெங்களூரு திரும்ப ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில், அவரது மனைவிக்கு இவர் இரண்டாவது கணவர் ஆவார். மூன்று வருடங்களுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 12 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த ஜோடிக்கு எட்டு மாத பெண் குழந்தை உள்ளது. ஆனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்துள்ளது. தனது சுதந்திரத்தை மனைவி பறிப்பதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது கணவன் – மனைவிக்கு கவுன்சிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.