புதுடெல்லி: ஐ.நா அளவுகோலை விஞ்சி 836 இந்தியருக்கு 1 மருத்துவர் என்ற நிலை இருப்பதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய சுகாதார துறையின் இணை அமைச்சர் அனுப்பிரியா படேல், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ‘தேசிய மருத்துவ ஆணையம், கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட தரவுகளின்படி 13 லட்சத்து 86 ஆயிரத்து 136 அலோபதி மருத்துவர்கள், மாநில மருத்துவ கழகங்களிலும் தேசிய மருத்துவ ஆணையத்திலும் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் 80 சதவீதம் பேர் மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று எடுத்துக்கொண்டால் ஆயுர் வேதா, சித்தா, யோகா, இயற்கை முறை மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளைக் குறிக்கும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைகளை அளித்துவரும் 5 லட்சத்து 65 ஆயிரம் மருத்துவர்களும் உள்ளனர். ஆக மொத்தம், 836 இந்தியர்களுக்கு 1 மருத்துவர் என்கிற விகிதத்தை இந்தியா எட்டியுள்ளது.
இதன் மூலம் 1,000 பேருக்கு குறைந்தது 1 மருத்துவர் என்கிற உலக சுகாதார அமைப்பின் அளவுகோலை இந்தியா விஞ்சியுள்ளது. நாட்டின் 731 மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 112 இளநிலை மருத்துவ பட்டத்துக்கான எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படுகின்றன’ என்றார்.
குடியுரிமையை துறந்த 2.16 லட்சம் இந்தியர்கள்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, ‘இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு எவ்வளவு பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அதற்கான காரணங்கள் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘கடந்த 2023ம் ஆண்டில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 பேர் இந்திய குடியுரிமையை தங்களுக்கு வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை ஒன்றிய அரசும் அங்கீகரிக்கிறது. வெற்றிகரமான, வளமையான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோர் இநதியாவின் சொத்தாக திகழ்கின்றனர்’ என்று கூறினார்.