Friday, July 19, 2024
Home » உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு மாளிகை கட்டப்படும்: தமிழக சட்டப்பேரவையின் பதிலுரையின் போது அமைச்சர் எ.வ. வேலு அறிவிப்பு

உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு மாளிகை கட்டப்படும்: தமிழக சட்டப்பேரவையின் பதிலுரையின் போது அமைச்சர் எ.வ. வேலு அறிவிப்பு

by Mahaprabhu

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பதிலுரையின் போது அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது; அசோகர் காலத்துக் கல்வெட்டுகளும், ஸ்தூபிகளும் இல்லாமல் போயிருந்தால், மௌரியப் பேரரசனின் மாட்சியினை, மனிதத் தன்மையினை நம்மால் உணர்ந்திருக்க முடியுமா? டெல்லியிலே உள்ள குதுப்மினார் சொல்லும் சரித்திரச் சான்றுகள் தான் எத்தனை! எத்தனை! ஆக்ராவில் “ஷாஜகானின் தாஜ்மஹால்“ தான் காதல் காவியத்திற்கு கோவிலாக ஒளி வீசுகிறது. இவை எல்லாம் வரலாறு எனும் அருமையான தங்கப்பேழைக்குத் திறவுகோலாகத் திகழ்பவையே.

குமரிமுனையில் முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவியுள்ள “அய்யன் திருவள்ளுவர் சிலை“ அந்தத் தங்கப் பேழையின் திறவுகோல்தானே! அதை உருவாக்கியதும் பொதுப் பணித்துறை தானே. பொதுமராமத்துத்துறை என இருந்ததை, 1967இல் பேரறிஞர் அண்ணா அவர்களால் “பொதுப்பணித்துறை“ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், முதன்முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தப் பொதுப்பணித் துறை தானே! இந்தத்துறையின் அமைச்சர் பொறுப்பினை எனக்கு வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திராவிட நாயகர் அண்ணன் தளபதி அவர்களுக்கு நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். பொதுப்பணித்துறை, பொதுவாக அரசின் கட்டமைப்புகளை உருவாக்கும் ஒரு முக்கியத் துறையாகும். 1858இல் உருவாக்கப்பட்டு, 165 ஆண்டுகளுக்கும் மேலாக பீடு நடை போடும் தாய்த்துறை ஆகும். இத்துறையில்,

o கட்டட கலைஞர்கள் பிரிவு,

o திட்டம் மற்றும் வடிவமைப்புப் பிரிவு,

o தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு,

o புராதன கட்டடங்களை புனரமைக்கும் பிரிவு

o கொதிகலன் பிரிவுகளுடன், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய நான்கு மண்டல தலைமைப் பொறியாளர்கள் தலைமையில், சிவில் மற்றும் மின் பொறியியல் பிரிவுகள் இயங்கி பல்வேறு அரசு துறைகளில் கட்டட கட்டுமானம் மற்றும் பாராமரிப்புப் பணிகளை செய்து வருகிறது. இத்துறையின் அனைத்துப் பணிகளும் நிர்வாக ரீதியாக முதன்மைத் தலைமைப் பொறியாளர் மூலம் ஒருங்கிணைக்கப் படுகிறது.

* பொதுப்பணித்துறை,

* அரசு மற்றும் தனியார் கட்டடங்களுக்கு கட்டட உறுதிச் சான்றிதழ் வழங்குதல்,

* எம்.சாண்ட் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குதல்,

* முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துதல்.

* செந்தர விலைப்பட்டியல்(Schedule of Rates) & தளப்பரப்பு விலைப் பட்டியல் (Plinth Area Rates) தயாரித்து அனைத்து துறைகளுக்கும் வழங்குதல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கிறது.

* 2023-2024 நிதியாண்டில், மருத்துவத்துறைக்கு 179 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 121 கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன.

* 71 அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 34 கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது.

* 12 நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, 21 கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது.

* 5 பாரம்பரிய கட்டடங்கள் புனரமைக்கப் பட்டு, 39 பாரம்பரிய கட்டடங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

* நபார்டு நிதியுதவி திட்டத்தின்கீழ், 68 உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாதிரி பள்ளி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 476 கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர வருவாய்த்துறை, பொதுத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை,
கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை கைத்தறி மற்றும் துணிநூல்துறை, போன்ற துறைகளுக்கும், கட்டடங்கள் கட்டி தரப்படுகின்றன. இத்தகு சிறப்பானப் பணிகளை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. அதே நேரத்தில், பொதுப்பணித்துறை மேற்கொண்ட முத்திரைத் திட்டப் பணிகள் குறித்து, உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

1. கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவனை, கிண்டி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஏழை எளியவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தினை தொடங்கினார். அவர் வழியில், திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நமது முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டினை நினைவு படுத்தும் வகையில் கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில், 1000 படுக்கைகளுடன் உலக தரத்திலான அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை கட்டடத்தினை குறிப்பிட்ட கால கெடுவிற்கு முன்னரே கட்டி முடித்து திறந்து வைத்தார்.

2. கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தனது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சென்னையில் ‘’அண்ணா நூற்றாண்டு நூலகம்’’ அமைத்தார். கலைஞர் வழியில், அவரது நூற்றாண்டினை சிறப்பிக்கும் வண்ணம் தென் தமிழக மக்களின் கோரிக்கை நிறைவு செய்யும் வகையில் மதுரையில் கவின்மிகு கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஆன்றோர் சான்றோர் பாராட்டும் வண்ணம் முதலமைச்சர் கட்டி முடித்துள்ளார். இந்த நூலகத்தை 9 இலட்சம் பார்வையாளர்கள் இதுவரை பயன்படுத்தியுள்ளனர்.

3. கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்

நமது சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு கலித்தொகை, மற்றும் சிலப்பதிகாரத்தில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. அழகாத்தேவன் – ஒய்யம்மாள் நாட்டார் கதைப் பாடலில்,

“கெழக்கே பிறந்த காளை
கீழக்குடி ஒய்யம்மா காளை
வேட்டி வச்ச ஆம்பள சிங்கம்,
அங்காளி பங்காளி அண்ணன் தம்பி
யாரொருவன் நிக்காதீங்க,
மொறையுள்ள மச்சான்மார்கள்
யாராக இருந்திட்டாலும் ஏழு காளை புடிச்சவங்க,
என்னத் தாலி கட்டிக்கங்க”

என இடம் பெற்ற தமிழர்களின் வீர விளையாட்டான “ஜல்லிக்கட்டு“ என்கிற “ஏறு தழுவுதல்“ இதுவரை ஆங்காங்கே திறந்தவெளியில் நடைபெற்று வந்தது. நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜரோப்பிய நாடுகளில் காளை விளையாட்டுகள் நிரந்தர அரங்கங்களில் நடைபெறுவதைப் போல, தமிழ்நாட்டிலும் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் அனைத்து வசதிகளுடன் தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாக அருங்காட்சியகத்துடன் கூடிய “கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல்“ அரங்கத்தினை கட்டி கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்து, தென்னக மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

4. கலைஞர் நினைவிடம்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை போற்றும் வண்ணம் அவரின் அழகுமிகு நினைவிடத்தினை உலகத் தரத்துடன் அமைக்க நாள்தோறும் எனக்கு ஆலோசனை வழங்கி, வரைபடத்தை தேர்வு செய்து, நவீன கட்டிடக் கலையுத்தியுடன் “கலைஞர் உலகம்” என்னும் அருங்காட்சியகத்தையும் அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.
அத்துடன் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தையும் அழகுற புதுப்பித்தார்,

“கலைஞர் உலகம்“ அருங்காட்சியகத்தில்

1) முப்பரிமான ஒளிப்படவியல் (Holography),

2) மிகை மெய்நிகர் தொழில்நுட்பம் (Augmented Reality),

3) ஊடாட்ட தொடுதிரை,

4) எழுபரிமாண மெய்நிகர் அனுபவம், (7D Train Experience)

5) கண்டு இணைக்கும் தொழிற்நுட்பம்.

போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கலைஞரின் வாழ்க்கை வரலாறு அனைவரையும் கவரும் வகையில் அழகுற சித்திரிக்கப்பட்டு உள்ளது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை, சுமார் 16 இலட்சம் பார்வையாளர்கள் நினைவிடத்தை கண்டுகளித்துள்ளனர். கடந்த 2.6.2024 அன்று, ஒரே நாளில் 59,211 பார்வையாளர்கள் பார்வையிட்டு உள்ளனர். “கலைஞர் உலகத்தில்“ உலகத் தலைவர்கள், இந்திய தலைவர்கள், “பெருந்தலைவர்“ காமராஜர், “மக்கள் திலகம்“ எம்.ஜி.ஆர்., அம்மையார் ஜெயலலிதா அவர்களின் காட்சிகள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளன. இதனால், நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையும், அரசியல் ஆளுமையின் உச்சம் புலப்படுகிறது.

5. கட்டடக் கலையில் புதுமை

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்றுதான் “கட்டடக்கலை“. மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் மொகலாய கட்டடக் கலை. மௌரிய பேரரசில் கட்டப்பட்ட கட்டடங்கள் மௌரிய கட்டடக் கலை.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் பல்லவ கட்டடக் கலை. சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்கள் சோழர்கள் கட்டடக் கலை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தோ-சராசனிக் கட்டடக்கலையைப் பிரிட்டிஷ் கட்டடக் கலை. அவைகளில், பல கட்டடங்கள், பல நூற்றாண்டுகளையும் கடந்து அப்பேரரசுகளின் திறமையையும், கலையையும், கலை உணர்வையும் பறைச் சாற்றுகின்றன.

நமது தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்றபின் அவர்களது சீரிய வழிகாட்டுதலின்படி, கட்டட வடிவமைப்பில், “வடிவம் செயல்பாட்டை பின் பற்றுகிறது“ என்ற சொற்றொடருக்கு ஏற்றார்போல், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence), விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) , பயோபிலிக் டிசைன் (Biophilic Design) போன்ற பல உயரிய தொழில் நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப் படுகின்றன. மேலும், வியட்நாம் மார்பிள், Quartzite கற்கள் போன்ற கட்டடத்தை மெருகூட்டும், கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டட கட்டுமான வடிவமைப்பில், கூட்டமைப்பு தொழில்நுட்ப உத்தி (Composite Technology), உயர் கான்கீரிட் கலவை(Self Compacting Concrete), துருப்பிடிக்கா வேதிமுலாம் பூசப்பட்ட இரும்புக் கம்பிகள்(Fusion bonded epoxy coated Steel) போன்ற நவீன உத்திகள் பயன்படுத்தப் படுகின்றன.

அறிவிப்புகள்

1) பாரம்பரிய கட்டடங்களை புனரமைக்கும் பணிகளை செம்மைப் படுத்தும் வகையில், சென்னையில் மரபு கட்டடங்கள் வட்ட அலுவலகம் ஏற்படுத்தப்படும்.

2) ஆறு பாரம்பரியக் கட்டடங்கள் ரூபாய் 43 கோடியே 34 இலட்சம் மதிப்பீட்டில், மறு சீரமைத்துப் புனரமைக்கப்படும்.

3) தரக்கட்டுப்பாடு உப கோட்டங்களுக்கு ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

4) உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு மாளிகை கட்டப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi