உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வசித்தவர் ரமணி (32). விருத்தாசலத்தில் உள்ள ஒரு வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். 8 வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்துள்ளார். அதன்பின் பாண்டூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோக்குடன் (33) பழக்கம் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினமும் நேற்றும் ரமணியின் பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என வந்துள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் கட்டிலில் ரமணி படுகொலை செய்யப்பட்டு, முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். புகாரின்படி எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். இதில் வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் ரமணியின் கணவர் அசோக் தலைமறைவானது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.