தற்போது பல விவசாயிகள் விதை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கும், தேவைப்படும் விவசாயிகளுக்கும் நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அவ்வாறு விதை உற்பத்தி செய்ய நினைப்பவர்கள் உளுந்து விதையை தரமான முறையில் எப்படி உற்பத்தி செய்யலாம் என கடந்த தர்மபுரி மாவட்ட வேளாண் துறை அலுவலர் வி.குணசேகரன் கடந்த இதழில் சில டிப்ஸ்களை வழங்கினார். அதன் தொடர்ச்சி இந்த இதழில் இடம்பெறுகிறது.
நுண்ணுயிர் விதை நேர்த்தி: பயறு வகைப் பயிர்களில் உள்ள வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தினை கிரகித்து பயிர்களுக்கு அளிக்கிறது. இதனால் பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது. பயிர் ஊக்கமாக வளர்கிறது. மேலும் பயிரின் தழைச்சத்து தேவை 25 சதவீதம் குறைகிறது. இதற்கு நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வது அவசியமாகிறது. இதற்கு இரண்டு பொட்டலம் ரைசோபியம் நுண்ணுயிர் மற்றும் 2 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா கலவையுடன் ஏக்கருக்கு தேவையான விதைகளை குளிர்ந்த அரிசிக் கஞ்சியுடன் கலந்து துவரைக்கு மண்பிடிப்பது போல செய்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்கலாம்.
விதைப்பு: சரியான பருவத்தில் சரியான ஆழத்தில் சரியான இடைவெளியில் விதைப்பு செய்வது அவசியம். வரிசைக்கு வரிசை 30 செமீ (ஒரு அடி) செடிக்கு செடி 10 செமீ அளவு இடைவெளி மற்றும் 2 செமீ ஆழத்தில் இரண்டு விதைகளாக விதைப்பு செய்ய வேண்டும். இதனால் விதைகள் நன்கு முளைத்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். விதைத்த ஒரு வாரத்தில் அதிகமாக உள்ள செடிகளை களைத்து சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: விதைக்கும்போது ஒருமுறை தண்ணீர், முன்றாம் நாள் உயிர் தண்ணீர், பின்னர் 10-15 நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பூப் பருவம் மற்றும் காய்பிடிக்கும் தருணத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது.
இலைவழி உரம்: அடியுரம் இடும்போது பயிரின் உடனடித் தேவை பூர்த்தி செய்யப்பட்டாலும், தொடர்ந்து சீரான வளர்ச்சிக்கு இலைவழி உரமிடல் அவசியம். இதற்கு யூரியா 4 கிலோ, டிஏபி 1 கிலோ, பொட்டாஷ் 600 கிராம் டீபால் 20 மிலியுடன் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து 25-35ம் நாள் ஒருமுறையோ, 40-50ம் நாள் ஒருமுறையோ கலந்து தெளித்தால் காய்கள் திரட்சியாக இருக்கும், அதிக மகசூல் பெறலாம். இதற்கு பதிலாக 2 கிலோ டிஏபியை 100 லிட்டர் தண்ணீரில் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அடுத்த நாள் காலையில் தெளிந்த தண்ணீரை 15 நாட்களுக்கு ஒருமுறையாக மொத்தம் இருமுறை தெளிக்க வேண்டும். தற்போது 17:17:17 அல்லது 19:19:19 என்ற கரையும் உரங்கள் இரண்டு கிலோவினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இருமுறை தெளித்து நல்ல பலனை விவசாயிகள் கண்டிருக்கிறார்கள்.
களை நிர்வாகம்: பயறுவகை சாகுபடியைப் பொருத்த மட்டில் களைகளின்றி இருந்தால் தான் நல்ல மகசூல் எடுக்க முடியும். பயிரின் ஆரம்ப காலத்திலிருந்தே களைகளின்றி இருப்பது அவசியம். உழவு செய்வதற்கு முன்பே அருகு, கோரை போன்ற களைகள் அதிகமாக இருந்தால் கிளைசெல் களைக்கொல்லி 10 மிலி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் 10 கிராம் அம்மோனியம் சல்பேட்டுடன் கலந்து தெளித்து ஒரு வாரம் கழிந்த பின் உழவு செய்து நடவுப் பணிகளை மேற்கொள்ளலாம் .விதைத்த 3ம் நாளுக்குள் 2 மிலி பாசலின் அல்லது 6 மிலி ஸ்டோம்ப் என்கிற பெண்டிமெத்தலின் களைக்கொல்லி ஒரு லிட்டருக்கு என்ற அளவில் கலந்து களைக்கொல்லிக்கான நாசிலைப் பெருத்தி பின்னோக்கி ( பாசலின் எக்டேருக்கு 1.5 லிட்டர், பெண்டிமெத்தலின் 2.0 லிட்டர் 300 லிட்டர் தண்ணீர்) தெளிக்க வேண்டும். இதனால் ஆரம்ப கால களைகள் கட்டுப்படும். பின்னர் 15 நாட்கள் கழித்து ஒரு கைக்களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பயிர் பாதுகாப்பு: தண்டு ஈயின் தாக்குதலால் செடிகள் காய்ந்து விடும். இதற்கு எண்டோசல்பான் மருந்தினை விதைத்த 7ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். வளர்ச்சி பருவத்தின்போது காணப்படும் அசுவிணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த மிதைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் அல்லது பாஸ்போமிடான் ஏதாவது ஒரு மருந்து 2 மிலியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வளர்ச்சிப் பருவத்தில் தேமல் நோய் தென்பட்டால் உடனே பயிரைப் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். மப்பும் மந்தாரமான வானிலையில் அசுவினிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் இதற்கு டைக்குளார்வாஸ் மருந்து 2மிலி ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.நோய்களைப் பொருத்தமட்டில் வாடல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்கக்கூடும். தாக்கப்பட்ட செடிகளை அகற்றி அந்த இடத்தில் பெவிஸ்டின் 10 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்த நீரை ஊற்ற வேண்டும். இதனால் நோய் பரவாமல் தடுக்கலாம். சாம்பல் நோய் தென்படும்போது ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் நனையும் கந்தகத்தூளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்…)