கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்று உக்ரைன் சென்றார். அங்கு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது போர் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புதனன்று போலந்து புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். போலந்து பயணத்தை முடித்த பிரதமர் அங்கிருந்து ரயில் மூலம் உக்ரைன் புறப்பட்டு சென்றார்.
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் போர் பதற்றம் நிறைந்த சூழ்நிலையில் பாதுகாப்பு கருதி பிரதமர் மோடி இந்த ரயில் பயணத்தை மேற்கொண்டார். சுமார் 10 மணி நேர பயணத்துக்கு பின் தலைநகர் கீவ்வை பிரதமர் மோடி நேற்று காலை சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு அந்நாட்டின் அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹயாத் ஓட்டலில் இந்திய சமூகத்தினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி கீவ்வில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்துக்கு சென்றார்.
அங்கு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியை கைக்குலுக்கியும் கட்டி அணைத்தும் வரவேற்றார். தொடர்ந்து அவருடன் இணைந்து அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு போரில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த விளக்கக் காட்சியை கண்டு பிரதமர் வேதனை தெரிவித்தார். போரின்போது அப்பாவி இளம் உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, உயிர்நீத்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு பொம்மையை வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒரு டெடி பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அதிபர் மாளிகையில் ஜெலன்ஸ்கி – பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது உக்ரைன் -ரஷ்யா இடையே தொடர்ந்து வரும் போர் குறித்து இந்தியா சார்பில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை கொண்டு வருவதில் கவனம் செலுத்தும்படியும், ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிபரை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இந்த மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே அது ஒரு பக்கம் இருக்கிறது. அது அமைதியின் பக்கம். இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது மனதை வேதனைப்படுத்துகிறது.
உக்ரைனுக்கு எனது வருகை வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா – உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் நான் இந்த மாபெரும் தேசத்திற்கு வந்தேன். அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தினேன். அமைதி எப்போதும் நிலவ வேண்டும். உக்ரைன் அரசுக்கும், மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி’ என தெரிவித்தார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா- உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி வேளாண்மை, உணவு துறை, மருந்து , கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகிய துறைகளில் உக்ரைனும் இந்தியாவும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வருகின்றது. சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் அந்நாட்டின் அதிபர் புடினை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து உக்ரைன் அதிபரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.