வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கடுமையான வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடின் முழு முட்டாளாகி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டாக போர் நடத்தி வரும் ரஷ்யா மீண்டும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து 3வது நாளாக நேற்று முன்தினம் இரவும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இப்போரியிலேயே மிகப்பெரிய அளவில் டிரோன், ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ரஷ்ய அதிபர் புடினுக்கும் எனக்கும் எப்போதும் நல்ல உறவு இருந்தது. ஆனால் அவருக்கு இப்போது ஏதோ ஆகி விட்டது. அவர் முற்றிலும் பைத்தியமாகி விட்டார். எந்த காரணமும் இல்லாமல் ஏவுகணைகள், டிரோன்களை உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ஏவுகிறார். தேவையில்லாமல் நிறைய பேரை கொல்கிறார். உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற புடின் விரும்பினால் அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்’’ என எச்சரித்துள்ளார்.
அதே சமயம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீது கோபப்பட்டுள்ள டிரம்ப், ‘‘அவர் வாயால் தான் எல்லா பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனக்கு அது பிடிக்கவில்லை. அவர் வாய் திறக்காமல் இருப்பது நல்லது’’ என கூறி உள்ளார். டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபராவதற்கு முன்பாகவே ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தப் போவதாக கூறி வந்தார். ஆனால், புடினிடம் எவ்வளவு முறை கேட்டும் அவர் வழிக்கு வரவில்லை. இதனால் புடின் மீதும் ஜெலன்ஸ்கி மீதும் டிரம்ப் கடுமையான அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.